முதலீடுகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தார் சிறிலங்கா அதிபர்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாட்டிற்குள் வரும் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
முதலீட்டு வாய்ப்புகள், வணிகச் சூழல் மற்றும் சட்ட கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று அதிபர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் முதலீடுகளுக்குப் பாதுகாப்பான சூழல் தற்போது நிறுவப்பட்டுள்ளதாகவும், முந்தைய நிர்வாகங்களின் கீழ் நிலவிய முறைகேடுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டார்.
முதலீட்டுச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை உறுதி செய்வதற்காக, ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் புதிய சட்டங்களை தற்போதைய அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும், இது சம்பந்தமாக, முதலீட்டாளர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், முதலீட்டாளர் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உறுதிப்பாட்டை வலுப்படுத்த முதலீட்டு பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் சிறிலங்கா அதிபர் கூறினார்.
இன, மதப் பிரிவுகளுக்கு அப்பால் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், திறமையான பொது சேவையை உருவாக்குதல், வெளிப்படையான இராஜதந்திர உறவுகளைப் பராமரித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தொழில்நுட்பத் தடைகளைத் தாண்டுதல் ஆகிய அனைத்தும் நாட்டின் முதலீட்டுச் சூழலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.