வவுனியா விமானப்படைத் தளம் அகற்றப்படாது
வவுனியா விமானப்படைத் தளத்தை சிறிலங்கா அரசாங்கம் அகற்றவுள்ளதாக வெளியான தகவல்களை சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.
வவுனியா விமானப்படைத் தளத்தின் கீழ் உள்ள காணிகளில் ஒரு பகுதியை விடுவிக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
பிரதமர் செயலகத்தில் இருந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அடுத்து, இந்த விவகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வவுனியாவை சேர்ந்த எஸ். ஞானசம்பந்தன் என்பவர், 1985 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட ஏ9 நெடுஞ்சாலையில் உள்ள தனது நிலத்தை விடுவிக்குமாறு கோரியுள்ளார் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், வவுனியா சிறிலங்கா விமானப்படை தளத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.
அத்தகைய கூற்றுக்களில் எந்த உண்மையும் இல்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு ஆய்வு செய்து வருவதாகவும், இந்தக் கோரிக்கை கடந்த ஆண்டும் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வவுனியா விமானப்படைத் தளத்திலிருந்து விமானப்படையை திரும்பப் பெற அரசாங்கம் சதி செய்து வருவதாக, நவ ஜனதா பெரமுன தலைவர் சுகீஸ்வர பண்டார கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் உள்ள உண்மையான எதிர்க்கட்சி இந்தப் பிரச்சினையை எழுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
போர் முடிவடைந்த பின்னர், சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 2009 இல் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மொத்த நிலங்களிலும் 91% விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் சவால் செய்யவில்லை என்றும், சுகீஸ்வர பண்டார கூறியிருந்தார்.