டெல்லி விமான நிலையத்தில் கால் வைக்கப் போகும் அமெரிக்கா
புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின், சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவை, செயற்பட வைக்குமாறு இந்தியா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்குச் செல்லும் பயணிகள், புதுடெல்லி விமான நிலையத்திலேயே அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சோதனைகளை நிறைவு செய்து – முன்கூட்டிய அனுமதியை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியை ஏற்படுத்தவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயணத்தை வேகமாகவும், தடையற்றதாகவும், உலகளவில் போட்டித்தன்மையுடனும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முன் அனுமதி அமைப்பின் மூலமாக, டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களில் பயணிப்பவர்கள் புறப்படுவதற்கு முன்னர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்றம், சுங்க சோதனைகளை முடிக்க முடியும்.
அமெரிக்காவிற்கு சென்று இறங்கியதும் இந்தப் பயணிகள் உள்நாட்டு பயணிகளாக கருதப்படுவார்கள்.
இதன் மூலம், நீண்ட வரிசைகளைத் தவிர்ப்பதுடன் பரபரப்பான அமெரிக்க விமான நிலையங்களில் தாமதங்களைத் தவிர்க்க முடியும்.
தற்போது, கனடா, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹாமாஸ், அருபா மற்றும் பெர்முடா போன்ற நாடுகளில் உள்ள 16 விமான நிலையங்களில் அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு முன் அனுமதி வசதிகள் செயற்படுகின்றன.
இந்த இடங்களில் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் 22 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை அவர்கள் கையாளுகின்றனர்.
இந்த வலையமைப்பில் சேரும் இந்தியாவின் முதல் விமான நிலையமாக டெல்லி இடம்பெறவுள்ளது.
இந்த முயற்சி இந்திய பயணிகளை மட்டுமல்ல, அமெரிக்காவிற்கு வேகமான, வசதியான இணைப்புகளைத் தேடும் அண்டை நாடுகளான நேபாளம், சிறிலங்கா, பூட்டான், பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பயணிகளையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்அனுமதி வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக டெல்லி விமான நிலையத்தில் அமெரிக்காவிற்கு தனியானதொரு இடவசதியை இந்தியா வழங்க வேண்டியிருக்கும்.