சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுமாறு பேராயர் வேண்டுகோள்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்காக, சுயாதீனமான வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுமாறு, கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாளில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை முன்னிட்டு, இன்று காலை கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட பிரார்த்தனை நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கு சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை அமைக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதியிடம் பேராயர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் பெரும் சதித்திட்டம் இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா கூறியிருந்த போதும், பின்னர் சட்டமா அதிபராகப் பதவி வகித்தவர்கள் அதுகுறித்து சரியாக கவனம் செலுத்தவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.
தாக்குதல் குழுக்கள், வெள்ளை வான்கள் மற்றும் சட்டவிரோத தடுப்பு மையங்கள் இல்லாத ஒரு புதிய சமூகத்தை உருவாக்குமாறும் பேராயர் மல்கம் ரஞ்சித் சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
