பௌத்த பிக்குகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது – மல்வத்த அனுநாயக்கர்
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பௌத்த பிக்குகள் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
”அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்துவதன் மூலமும், தங்கள் பொறுப்புகளை முறையாகச் செய்வதன் மூலமும், பௌத்த பிக்குகள் நாட்டுக்கும், தேசத்திற்கும், மதத்திற்கும் ஒரு சிறந்த சேவையை வழங்க முடியும்.
எமது பிக்குகள் அரசியல் காரணமாக மனக்கிளர்ச்சியுடன் செயற்படுகிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள பௌத்த பிக்குகளின் மரியாதையும் புகழும் பாதிப்படையத் தொடங்கியுள்ளது. எனவே, பிக்குகளை அரசியலில் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும். பௌத்த பிக்குகள் நாட்டின் தலைவர்களுக்கு சரியான பாதையை காட்ட வேண்டும், ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.