எம்சிசி மீளாய்வுக் குழு தலைவருக்கே தெரியாத ஆணை
மிலேனியம் சவால் நிறுவன (எம்.சி.சி) உடன்பாட்டை, மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவுக்கு, அதன் நோக்கம் மற்றும் அதன் ஆணையின் காலஎல்லை குறித்து இன்னமும் தெரிவிக்கப்படவில்லை, என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட எம்சிசி உடன்பாட்டை இடைநிறுத்தி வைக்க தற்போதைய அமைச்சரவை முடிவு செய்ததுடன், இந்த உடன்பாட்டை மீளாய்வு செய்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றையும் நியமித்தது.
இந்த நிலையில், இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசியரியர் லலிதசிறி குணருவன் கருத்து வெளியிடுகையில்,
“எமக்கு இன்னும் எந்த விபரங்களும் தரப்படவில்லை. ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
இதற்கான விதிமுறைகளை அரசாங்கம் வழங்கும். இப்போதைக்கு, குழுவின் நோக்கம் எங்களுக்குத் தெரியாது, ” என்று கூறியுள்ளார்.