மேலும்

சிறிலங்கா அரசுடன் சுவிஸ் அரசின் சிறப்புப் பிரதிநிதி முக்கிய பேச்சு

சிறிலங்கா வந்துள்ள சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் சிறப்புப் பிரதிநிதி, சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக உள்நாட்டுப் பணியாளர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டை அடுத்து, அரசாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சிறிலங்காவுக்கும் சுவிசுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியான முரண்பாடுகள் எழுந்துள்ளன.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக, சிறிலங்காவுக்கான முன்னாள் தூதுவரும், சுவிஸ் வெளிவிவகார திணைக்களத்தின் அனுபவம்வாய்ந்த இராஜதந்திரியான  ஜோர்க் பிறீடென் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று கொழும்பு வந்து சேர்ந்த அவர், கொழும்பில் உள்ள சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக்குடன் இணைந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

எனினும் இந்தப் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அதேவேளை, சுவிஸ் வெளிவிவகாரத் திணைக்களத்தின் பிரதிநிதியான ஜோர்க் பிறீடென் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் நேற்று பேச்சுக்களை நடத்தியதாகவும், இதன் போது, கைது செய்யப்பட்டுள்ள தூதரகப் பணியாளரை மருத்துவமனை போன்ற பொருத்தமான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களின் பாதுகாப்புக் குறித்தும். சுவிஸ் சிறப்புப் பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார் என்றும் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *