மேலும்

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர்

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும், ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த 99 ஆண்டு குத்தகை உடன்பாட்டை மாற்ற விரும்புகிறீர்களா என்று  எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா அதிபர்,

“அதை மாற்ற முயற்சிக்கவில்லை, ஏனெனில் இது முன்னைய அரசாங்கம் செய்து கொண்ட வணிக உடன்பாடு.

முன்னைய அரசாங்கம் இந்த உடன்பாடு குறித்து பேச்சு நடத்தியபோது, பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இது மீள் பேச்சுவார்த்தை அல்ல, இது ஒரு வணிக உடன்பாடு என்பதால், அதன் வணிக அம்சங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நான் கவலைப்படுகிறேன், அதுகுறித்தே நாங்கள் அவர்களுடன் பேசவுள்ளோம்.

துறைமுகத்தின் கட்டுப்பாட்டு பொறிமுறை குறித்து ஆராய்கிறோம். ஏனைய துறைமுகங்களைப் போலவே, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டையும் அரசாங்கமே வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு, ஆகிய விடயங்கள், அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்.

கொழும்பு துறைமுகத்தைப் போல,  எந்தக் கப்பல்கள் வரும் அல்லது செல்ல வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அந்த அதிகாரம் எங்களி்டம் இருக்க வேண்டும்.

சீன பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதித்தேன். துறைமுகத்தின் பாதுகாப்பு, அரசிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு அவர்கள் உடன்பட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்திற்கு ஒரு கப்பல் வரும்போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன. இதே நடைமுறை, காங்கேசன்துறை, திருகோணமலை அல்லது அம்பாந்தோட்டையிலும் பின்பற்றப்பட வேண்டும்.

நான் பதவியேற்ற பின்னர், என்னைச் சந்தித்த சீன சிறப்பு பிரதிநிதியுடன் இந்த விடயம் பற்றி கலந்துரையாடினேன்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் துறைமுக கட்டுப்பாடு தொடர்பான விடயங்களில் திருத்தம் செய்வதற்கு அவர் இணங்கினார்.

ஒரு அரசாங்கத்துடன் கையெழுத்திடப்பட்ட வணிக உடன்பாடுகள், அடுத்த அரசாங்கத்தால் மதிக்கப்படுவதில்லை, அதனை மாற்றி விடும் என்ற எண்ணத்தை முதலீட்டாளர்களிடம் ஏற்படுவதுவதற்கு நான் விரும்பவில்லை. அது பிரச்சினையல்ல.

துறைமுகத்தை ஒரு முக்கிய மூலோபாய பொருளாதார மையமாகும். இது ஒரு இறையாண்மை கொண்ட அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய ஒரு சொத்து.

உலகளாவிய அதிகாரப் போட்டிகளின் ஒரு பகுதியாக மாற நாங்கள் விரும்பவில்லை.

உடன்பாடுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்துள்ளோம். அதன் கண்டறிவுகளின் அடிப்படையில், துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையை மறுசீரமைக்க முயலக்கூடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *