மேலும்

குத்துக்கரணம் அடித்த வெள்ளை வான் சாட்சிகள் – ராஜிதவுக்கு எதிராக வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரியதன் படியே, வெள்ளை வான் கடத்தல்கள் பற்றி செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியதாக, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர், ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் தோன்றிய வெள்ளை வான் சாரதி மற்றும் சாட்சி என்று கூறப்பட்ட இரண்டு பேர், குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று குற்ற விசாரணைத் திணைக்களம் கொழும்பு பிரதம நீதிவானுக்கு அளித்துள்ள அறிக்கையிலேயே, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரியதன் படியே, வெள்ளை வான் கடத்தல்கள் பற்றி செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியதாக, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறியுள்ளது.

ராஜித சேனாரத்ன கோரியபடியே, விடுதலைப் புலிகளின்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பின் போது, பொய்யான தகவல்களை அளித்ததாக சந்தேக நபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற 3 மில்லியன் ரூபாவை தாங்கள் கோரியதாகவும், அமெரிக்க அல்லது இங்கிலாந்து தூதரகத்தில் வேலையும், இரண்டு வீடுகளும் வழங்க ராஜித சேனாரத்ன ஒப்புக்கொண்டதை அடுத்து,  2 மில்லியன் ரூபாவாக அதனை குறைக்க இணங்கியதாகவும்,  சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதாகவும் குற்ற விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜித சேனாரத்ன எழுதிக் கொடுத்ததையே தாங்கள் கூறியதாகவும், அங்கு கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் எனவும் சிஐடி தெரிவித்துள்ளது.

பணம் கொடுப்பதாக ராஜித சேனாரத்ன ஒப்புக் கொண்டதன் பின்னரே தாங்கள் செய்தியாளர் சந்திப்புக்கு இணங்கியதாகவும் அவர்கள் கூறியதாக நீதிவானிடம் குற்ற விசாரணைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *