சிறீகாந்தா தலைமையில் உருவானது தமிழ்த் தேசியக் கட்சி
ரெலோவில் .இருந்து நீக்கப்பட்ட, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் என்.சிறீகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய கட்சியின் ஆரம்ப நிகழ்வும், அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பும் யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவராக என்.சிறீகாந்தாவும், செயலாளராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கட்சியின் நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இனியும் தொடர்ந்து பயணிப்பது தமிழ் மக்களின் நலன்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்று தெரிவித்த புதிய கட்சியின் தலைவர் சிறீகாந்தா, தமது கட்சி எதிர்காலத்தில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் ஆகியவற்றுடன் இணைந்து புதிய அணியொன்றை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கும் என்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கத்தையும், அவருக்கு ஆதரவளித்த என்.சிறீகாந்தாவையும், ரெலோ அண்மையில் கட்சியில் இருந்து இடைநிறுத்தியிருந்தது. இதையடுத்தே அவர்கள் புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர்.
இதற்கிடையே, ரெலோவின் யாழ். மாவட்டக் குழுக் கூட்டமும் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது சிறியதொரு சூறாவளி தான் என்றும் இதனால் தமது கட்சிக்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.