மேலும்

நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்னெக்கும் – இந்தியப் பிரதமர் நம்பிக்கை

சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும், நல்லிணக்க செயல்முறையை சிறிலங்கா  அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுசில் நடந்த இந்தச் சந்திப்பின் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து. சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

இங்கு கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,

“சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனது முதல் வெளிநாட்டு அதிகாரபூர்வ  பயணத்துக்காக இந்தியாவை தெரிவு செய்தது, எங்களுக்கு நல்வாய்ப்பாகவும், பெருமையாகவும் உள்ளது.

அவர் அதிபராகப் பதவியேற்று இரண்டு வாரங்களுக்குள்  அவரை வரவேற்பதற்கு  எங்களுக்கு கிடைத்துள்ளது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்.

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில், இந்த பயணம் நீண்ட தூரம் செல்கிறது.

ஒரு வலுவான மற்றும் வளமான சிறிலங்கா இந்தியாவின் நலன்களுக்கு  மட்டுமல்ல, முழு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் நலன்களுக்கும் அவசியமானது.

சிறிலங்கா, இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடு மட்டுமல்ல, மிகவும் நம்பகமான நண்பனும் கூட.

எமது இரு நாடுகளின் பாதுகாப்பும் வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. எனவே ஒருவருக்கொருவர் பாதுகாப்பு மற்றும் உணர்திறன் குறித்து நாம் கவனமாக இருப்பது இயற்கையானது.

இனங்கள், மொழிகள், எமது கலாச்சாரங்கள் உட்பட பல வழிகளில் நாங்கள் பிணைக்கப்பட்டுள்ளோம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும், தேவைப்படும் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவவும் நாங்கள் இருவரும் கூட்டாக உறுதியளித்துள்ளோம்.

சிறிலங்காவின்  உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு உதவுவதற்காக, 400 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா வழங்கும்.

இந்தியா எப்போதும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்து வருகிறது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதத்தின் இரக்கமற்ற தன்மையை நிரூபித்தது.

சிறிலங்கா அதன் தேசத்தைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதற்கும் நாங்கள் ஆதரவளிப்போம்.

இது குறித்து நான் சிறிலங்கா அதிபருடன் விரிவாகப் பேசியுள்ளேன். இந்த நோக்கத்திற்காக பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக 50 மில்லியன் டொலர்களை வழங்குவோம்.

சிறிலங்காவில் நல்லிணக்கம் குறித்து நாங்கள் கருத்துக்களை பகிரங்கமாக பரிமாறிக் கொண்டோம்.

இன நல்லிணக்கம் குறித்த தனது அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி அதிபர் ராஜபக்ச என்னிடம் கூறினார்.

சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும், நல்லிணக்க செயல்முறையை சிறிலங்கா  அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன்.

13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் இதில் அடங்கும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட  சிறிலங்கா முழுவதினதும்  வளர்ச்சிக்கு இந்தியா நம்பகமான பங்காளியாக மாறும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *