மேலும்

வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

கொழும்பில் 2008-09 காலப்பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆட்களைக் கடத்தியது, சித்திரவதை செய்தது, கப்பம் பெற்றது, கொலை செய்ய சூழ்ச்சி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ், 667 குற்றச்சாட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்,  மேல்நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் தலைமை நீதியரசரினால் நியமிக்கப்பட்டதும், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும்  மூத்த அரச சட்டவாளர் ஜனக பண்டார தெரிவித்தார்.

இந்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட,  மற்றும் கடற்படை அதிகாரிகளான டிகேபி தசநாயக்க, சம்பத் முனசிங்க, சுமித் ரணசிங்க, டிலங்க சேனாரத்ன, நளின் பிரசன்ன விக்ரமசூரிய, அன்ரன் பெர்னான்டோ, ராஜபக்ச பத்திரனஹேலகே கித்சிறி, அனுர துசார மென்டிஸ், கத்திரிஆராச்சிகே காமினி எனப்படும் அம்பாறை காமினி, சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி எனப்படும் நேவி சம்பத், உபுல் சந்திம எனப்படும் அண்ணாச்சி, நந்தபிரிய ஹெற்றிஹெந்தி, சம்பத் ஜனககுமார  எனப்படும் பொடி குமார ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குற்றவியல் சட்டத்தின், 102, 113 A, 356, 338, 333, 198, 372, 32 மற்றும் 296 பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *