மேலும்

தேர்தல் விளம்பரத்துக்கு பொறுப்பேற்க முடியாது – சிறிலங்கா இராணுவ தளபதி

தாம் முன்னர் கூறிய கருத்து ஒன்றை அதிபர் தேர்தல் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியமைக்கு தம்மால் பொறுப்பேற்க முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவின் பரப்புரை விளம்பரம் ஒன்றில் சிறிலங்கா இராணுவத் தளபதியின் படம் மற்றும் கருத்து என்பன இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து ஐதேக செய்த முறைப்பாட்டை அடுத்து, இவ்வாறான விளம்பரங்களை வெளியிடுவது தேர்தல் சட்ட மீறல் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியிருந்தார்.

அத்துடன் இதுகுறித்து இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து ஒரு வாரத்துக்குள் விளக்கத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சிறிலங்கா இராணுவத் தளபதி தமது நிலைப்பாட்டை விளக்கி பாதுகாப்புச் செயலருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள  இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா,

“கோத்தாபய ராஜபக்சவின் பரப்புரை விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட படமும், கருத்தும்  இராணுவத் தளபதியாக இருந்த போது பெறப்பட்டவையல்ல.

கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராகவும், நான் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் இருந்த போது களுத்துறையில் நடந்த நிகழ்வில் வெளியிட்ட கருத்தும் படமுமே அது.

தேர்தல் விளம்பரத்துக்கு எனது படமும், கருத்தும் பயன்படுத்தப்பட்டதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.

அதனை வெளியிட்டவர்களுடன் தான் இந்த பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் ஏற்கனவே அறிவித்துள்ளேன்.

எனது விளக்கம் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுதி செய்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *