மேலும்

கோத்தா, மகிந்தவுடன் சுமந்திரன் நடத்திய பேச்சு தோல்வி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கோத்தாபய ராஜபக்சவிடம் கோரப்பட்டிருந்தது.

எனினும், இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றிருந்த மகிந்த ராஜபக்ச, இடையில் தலையிட்டு,தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விட தெற்கிலுள்ள மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகள், தெற்கிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒத்தவை தான் என்றும், மகிந்த ராஜபக்சவும் கோத்தாபய ராஜபக்சவும் தெரிவித்துள்ளனர்.

பேச்சுக்களின் முடிவில், தமது எதிர்கால அரசாங்கத்தில், வடக்கு,கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு தீர்வுகளை வழங்க முடியும் என்று நம்புவதாக மகிந்த ராஜபக்சவும் கோத்தாபய ராஜபக்சவும், கூறியிருந்தனர்.

இந்தப் பேச்சு தொடர்பான அறிக்கையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் முன்வைத்த சுமந்திரன், இந்தப் பேச்சுக்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, கோத்தாபய ராஜபக்சவுடன் வடக்கு,கிழக்கு பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து மேலும் விவாதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும்,  ஏனெனில் ராஜபக்சவினரிடம் இருந்து  தமிழ் மக்களால் ஒருபோதும் தமது உரிமைகளை வெல்லவோ அல்லது எந்த நிவாரணத்தையும் பெறவோ முடியாது என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *