மேலும்

மூன்றாக பிளவுபடும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி?

அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்திருப்பதை அடுத்து, கட்சி மூன்றாக பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களிடம்  அதிபர் தேர்தல் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில், பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிப்பதற்கு பலர் ஆதரவளித்த போதும், இன்னும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாக சிறிலங்கா அதிபர் நேற்றிரவு மகிந்த ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தினார்.

எனினும், இதற்கு சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

எதிர்ப்பு வெளியிட்டுள்ள அணியினரில் ஒரு பகுதியினர் சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் இயக்கம் என்ற பெயரில் இயங்கவுள்ளனர். அவர்களின் சார்பில் குமார வெல்கம அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

மற்றொரு அணியினர், சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளனர் அல்லது ஐதேகவுக்கு தாவ முடிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கட்சி பிளவுபடும் வாய்ப்பு இல்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *