மேலும்

நீதிமன்றை அவமதித்த கோத்தாவின் சட்டவாளர்கள் – கோபத்தை வெளிப்படுத்திய நீதியரசர்

கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குபட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அறிவித்த போது, நீதிமன்ற அறையில் இருந்த அவரது சட்டவாளர்கள் கைதட்டியும் பெரும் கூச்சல் எழுப்பியும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணியளவில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 301 ஆவது அறையில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோத்தாகொட தலைமையிலான மூன்று நீதியரசர்களும், முன்னிலையாகினர்

அப்போது, கோத்தாபய ராஜபக்ச தரப்பு சட்டவாளர்களால், நீதிமன்ற அறை நிரம்பியிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோத்தாகொட, நீதிமன்றத்தின் மூவர் கொண்ட அமர்வு, ஒரு மனதாக, கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையை நிராகரிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

அவர் தீர்ப்பின் முதல் பந்தியை வாசித்து முடித்ததும், அங்கிருந்த கோத்தாபய ராஜபக்ச தரப்பு சட்டவாளர்கள் பெரும் கூச்சல் எழுப்பி, கைதட்டி வரவேற்றனர்.

இதனால் நீதியரசர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீதியரசர் யசந்த கோத்தாகொட கோபத்துடன் அமைதி பேணுமாறு அறிவித்தார். எனினும், கூச்சல் அடங்க சிறிது நேரமானது.

நீதியரசர்களின் கோபத்தை புரிந்து கொண்ட கோத்தாபய ராஜபக்சவின் சட்டவாளர் உடனடியாக தமது தரப்பு சட்டவாளர்களை அமைதிப்படுத்திய பின்னர், நீதியரசர்களை நோக்கி மன்னிப்புக் கோரினார்.

எனினும், நீதியரசர் யசந்த கோத்தாகொட இந்த நடவடிக்கையை மிகமோசமான, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டதுடன், இவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்த அல்லது நீதிமன்றை அவமதிக்கும்  நடவடிக்கையில் ஈடுபட்ட சட்டவாளர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும் என எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *