மேலும்

பொதுவேட்பாளரை தேடும் தமிழ் பிரமுகர்கள் குழு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை போட்டியில் நிறுத்துவதற்கான முயற்சிகளில் தமிழ் மக்கள் பேரவை மற்றும் பேரவையினால் நியமி்க்கப்பட்ட பிரமுகர்கள் குழு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் எந்தவொரு அதிபர் வேட்பாளரும் உத்தரவாதங்களைத் தராத நிலையில், தமிழர் தரப்பில் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன் பேச்சு நடத்த முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட மதத் தலைவர்கள், அரசியலாளர்கள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் உள்ளிட்ட துறைசார் வல்லுனர்களின் குழுவொன்று நேற்று முன்தினம் கொழும்பு சென்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தனியாக சுமார் 3 மணிநேரம் பேச்சு நடத்தியது.

இதையடுத்து, தமிழ்த் தேசிய  மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளுடனும் இந்தக் குழுவினர் பேசியிருந்தனர்.

நேற்றுக்காலை யாழ்ப்பாணம் திரும்பிய இந்தக் குழுவினர், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து பிரமுகர்கள் குழு பேச்சு நடத்தியது.

இந்தக் பேச்சுக்களின் போது, தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தனையும், சி.வி.விக்னேஸ்வரனையும் பொது வேட்பாளராக போட்டியிடுமாறும் இந்தக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் இருவரும், அதனை நிராகரித்துள்ளனர்.

பொதுவேட்பாளர் தொடர்பாக பரிசீலிப்பதற்கு சாதகமாக இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டதாகவும், அரசியல் சார்பில்லாத ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தினார் ஆதரிக்கத் தயார் என்று சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அரசியல் சார்பில்லாத- பொது வேட்பாளராக நிறுத்தக் கூடிய ஒருவரைத் தெரிவு செய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *