மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் குமார வெல்கம

சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடா விட்டால், வரும் அதிபர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அவர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்றும், அவ்வாறு போட்டியிடாவிட்டால், சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பாக தான், சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும், குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்திய அவர், நாளையே கட்டுப்பணம் செலுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐதேக அல்லது, பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுத்தால், கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.

அதேவேளை, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் இன்று மாலை பேச்சு நடத்தவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்தப் பேச்சுக்களில் மொட்டு சின்னத்தை கைவிட இணங்கினால், நாளையே இருதரப்புக்கும் இடையில் கூட்டணி ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *