மேலும்

சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா

சிறிலங்காவுடன், புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும், 1995ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை செய்வதற்கு மாத்திரம் அமெரிக்கா முற்படுவதாகவும், அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர்,

‘1995ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டில், சில திருத்தங்களை செய்வதற்கு மாத்திரம் அமெரிக்கா கோரியுள்ளது.

அமெரிக்க இராணுவத்தினரும், பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த சிவிலியன்களும் எவ்வாறு சிறிலங்காவுக்குப் பயணம் செய்ய முடியும் என்பதை இது உள்ளடக்கியுள்ளது.

அமெரிக்காவும் இலங்கையும், இரண்டு நாடுகளினதும் மக்கள் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்பியுள்ளன.

இந்த புதுப்பிப்புகள் ஏற்கனவே இடம்பெறும் செயல்முறைகளை சீர்செய்து, பயங்கரவாத எதிர்ப்பு நடைமுறைகள், கடல் பாதுகாப்பு மற்றும் ஏனைய பொதுவான கரிசனைக்குரிய விவகாரங்களின் மீது சிறிலங்கா இராணுவத்துடன் ஒத்துழைக்க உதவுகின்றன.

அமெரிக்காவுக்கும் பூகோள பங்காளர்களுக்கும் இடையிலான இந்த வகையான உடன்பாடுகள், நிலையான நடைமுறைகளைக் கொண்டவை. உலகின் 100இற்கும் மேற்பட்ட நாடுகளுடன் இதுபோன்ற உடன்பாடுகளை அமெரிக்கா செய்துள்ளது.

பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட, இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கக் கூடிய, வழக்கமான நிர்வாக நடைமுறைகளின் மூலம், பயிற்சிகள், ஒத்திகைகள், மற்றும் பரிமாற்ற வசதிகளை இந்த உடன்பாடுகள் வழங்குகின்றன.

சிறிலங்காவில் அமெரிக்க படைகள் தளம் அமைப்பதற்கோ அல்லது இங்கு கருவிகளை வைத்திருக்கவோ எந்த வகையிலும் இந்த உடன்பாடு அனுமதிக்காது.

அமெரிக்க படையினர், கப்பல்கள், விமானங்கள், சிறிலங்காவின் பிராந்தியத்துக்குள்ளேயோ, அதன் நீர்ப்பரப்புக்குள்ளேயோ, வான்பரப்பிலோ நுழைவதற்கு, அல்லது வெளியேறுவதற்கு  அனுமதிக்கும் அல்லது மறுக்கின்ற எல்லா உரிமைகளையும் சிறிலங்கா கொண்டிருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *