மேலும்

மேல் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பாடசாலைகள் திறப்பு – திணறடிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

சிறிலங்காவில் நாளை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை சுற்றாடலில், வாகனங்களை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.

இதனால் பாதுகாப்புக் கருதி பாடசாலைகளை மீளத் திறப்பதை சிறிலங்கா அரசாங்கம் இரண்டு தடவைகள் பிற்போட்டது.

பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியை அடுத்து நாளை மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 6ஆம் தரம் தொடக்கம் 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கே நாளை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

1ஆம் தரம் தொடக்கம் 5ஆம் தரம் வரையான மாணவர்களுக்கு 13ஆம் நாளே கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

அத்துடன், பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 1 மணியில் இருந்து எந்தவொரு பாடசாலைக்கு அருகிலோ, அதன் சுற்றாடலிலோ வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.

பாடசாலை வாகனங்களும் கூட பாதுகாப்புக் கருதி, பாடசாலைகளுக்கு அருகில் அனுமதிக்கப்படாது. குறிப்பிட்ட பாடசாலைகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளில் இன்று சிறிலங்கா காவல்துறையினர் படையினர் தேடுதல்களை நடத்தி, பாதுகாப்பை உறுதி செய்யவுள்ளனர்.

அத்துடன் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும், தேவைப்பட்டால் படையினரும், பெற்றோரும், மாணவர்களைச் சோதனையிட்ட பின்னரே பாடசாலைக்குள் அனுமதிக்கவுள்ளனர்.

வகுப்புகள் ஆரம்பிக்க முன்னர், வகுப்பறைகளைச் சோதனையிடும் பணியில்  பெற்றோரை சுழற்சி முறையில் ஈடுபடுத்தவும், ஆசிரியர்களை காலை 6.30 மணிக்கு பாடசாலைகளில் சமூகமளிக்குமாறும்  அதிபர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாளாந்த அறிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே தற்காலிக ஏற்பாடாக, வடக்கு மாகாண பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பித்து, 2 மணி வரை வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *