மேலும்

தாக்குதல்களுடன் இந்தியாவுக்கு நேரடித் தொடர்பு – சிறிலங்கா தளபதியின் பெயரில் பாகிஸ்தான் குசும்பு

பாகிஸ்தானைத் தளமாக கொண்ட பாகிஸ்தான் இராணுவ ஆதரவு கீச்சகப் பதிவர்கள், போலியான சிறிலங்கா கீச்சக கணக்குகளின் மூலம் இந்தியாவுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயின்  நூற்றுக்கணக்கான போலி கணக்குகளை கீச்சகம் முடங்கியுள்ள போதிலும், புதிய தொகுதி போலி கணக்குகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரிகேடியர் என்எல்கே சமரசிங்க என்ற பெயரில், பாகிஸ்தானின் ஹுபைப்,  என்பவர், கீச்சகத்தில் இந்தியாவை இகழ்ந்துள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதலில் இந்தியா நேரடியாக தொடர்புபட்டிருந்தது. புலனாய்வு அமைப்புகள் ஆதாரங்களைத் திரட்டியுள்ளன. நாங்கள் ஐ.நாவிடம் முறையிடவுள்ளோம். இந்தியா மீது மேலதிக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம். இப்போது, இந்தியா எதிர்விளைவுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு, @cmd_artillery என்ற கீச்சக கணக்கின் ஊடாக இடப்பட்டுள்ளது. இந்தப் பதிவு 700 மீள்பதிவுகளையும், 1237 விருப்பங்களையும் பெற்றிருக்கிறது.

இந்தக் கீச்சகக் கணக்கு சிறிலங்கா இராணுவ ஆட்டிலறிப் பிரிவின் தளபதி பிரிகேடியர் என்எல்கே சமரசிங்கவின் அதிகாரபூர்வ கணக்கு என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கீச்சக கணக்கு சரிபார்க்கப்படவில்லை. இந்த கணக்குக்குப் பின்னால் உள்ள உண்மையான அடையாளத்தை கீச்சகம் உறுதிப்படுத்தவில்லை. 2019 பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கணக்கில் இருந்து, 2019 ஏப்ரல் 29ஆம் நாளிலேயே முதல் பதிவு இடப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கு முன்னதாக, Hubaib (@Lewany_yam) என்ற பெயரில் இயக்கப்பட்டது என்று அறியப்படுகிறது.

ஒவ்வொரு கீச்சகக் கணக்கிலும் தனித்துவ அடையாள இலக்கம் உள்ளது, இதனை Gettwitterid.com இல் காணலாம். இந்த நிலையில், @cmd_artillery என்ற கணக்கின் தனித்துவ அடையாள இலக்கம், 1101055967872069633 ஆகும்.

இந்த கணக்கின் பழைய கீச்சகப் பதிவுகளைத் தேடும் போது, அது Hubaib (@ lewany_yam) என்ற பெயரால் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவந்தது.

@cmd_artillery என்ற கணக்கைப் பின்டிதொடர்பவர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள் பெரும்பான்மை பாகிஸ்தானியர்களாவர் என்றும்  கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்ற கணக்கு HUBAIB YOUSEFZAI (@da_watan_lewany) என்ற பெயரிலும், உள்ளது. இந்த கணக்கின் பெயரில் HUBAIB என்றும், பயனர்பெயர் lewany என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா மோசமான பயங்கரவாத தாக்குதலில் சிக்கியிருக்கும் நிலையில் பாகிஸ்தான் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைவதாக,  இந்திய ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *