மேலும்

சிறிலங்காவில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்

சிறிலங்காவில் மீண்டும் இன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு 8 மணிக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படும்  ஊரடங்குச் சட்டம், நாளை அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், இன்று இரவு நேர  தொடருந்துகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

குடிநீரில் விசம் – வதந்தியால் பதற்றம்

குடிநீரில் விசம் கலக்கப்பட்டுள்ளதாக பரவியுள்ள வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று சிறிலங்கா காவல்துறை  பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

களனிய, கிரிபத்கொட, ஜா-எல பகுதிகளில் குடிநீரில் விசம் கலக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டிருந்தன. இதனால் மக்கள் பீதியடைந்திருந்தனர்.

விசாரணைக் குழு அமைப்பு

சிறிலங்காவில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைத்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, பத்மசிறி ஜெயமான்ன, முன்னாள் காவல்துறை மா அதிபர் இலங்ககோன் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவங்கள், அதன் பின்னணி, தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தி இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க இந்தக் குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *