மேலும்

கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள றோய் சமாதானத்துடன் பொன்சேகா, விக்கி

அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.

”கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் மனோஜ்குமார் சமாதானம், சிறிலங்கா அரசாங்க உயர்மட்டங்களுடன் பேசியிருக்கிறார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் முன்னிலை வகிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, றோய் சமாதானத்துடன் இணைந்து ஒளிப்படமும் எடுத்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளை கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் றொய் சமாதானத்துடன் ஒளிப்படம் எடுத்திருக்கிறார்.

சிறிலங்கா அமைச்சர் மங்கள சமரவீரவும், கோத்தாபய ராஜபக்ச மீதான இந்த வழக்கிற்குப் பின்னால் இருக்கிறார்.  அவர் தொடர்ச்சியாக கோத்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

உள்ளூர் நீதிமன்றங்களில் கோத்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத அரசாங்கம், வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி, வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

பொதுஜன பெரமுன இன்னமும் அதிபர் வேட்பாளரை தீர்மானிக்கவில்லை. அவர்களுக்கு சவாலை ஏற்படுத்தக் கூடியவர்களில் ஒருவராக கோத்தாவை பொதுஜன பெரமுன அடையாளம் கண்டுள்ளது. எனவே தான், கோத்தாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும், அவரது அமெரிக்க குடியுரிமை நீக்க செயற்பாடுகள் மே மாதத்துக்குள் நிறைவடையும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *