மேலும்

சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள்ளேயும் சோதனையிட்ட ஐ.நா குழு

சிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு, இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர் முதல் முறையாக சிறிலங்காவில் ஆய்வுப் பயணத்தை கடந்த 2ஆம் நாள் மேற்கொண்டனர்.

நேற்றுடன் இந்தக் குழுவினரின் சிறிலங்கா பயணம் நிறைவடைந்தது.

இந்தப் பயணம் தொடர்பாக, நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட குழுவின் தலைவர், விக்டர் சகாரியா,

“இந்தப் பயணத்தின் போது எமக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. தடுப்பு நிலையங்கள் அனைத்துக்கும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களையும் பெறுவதற்கும், இரகசியமாக நேர்காணல்களை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.

சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்துக்கு ஏற்ப, ஒரு தேசிய தடுப்பு பொறிமுறையை உருவாக்குவதில், சிறிலங்கா சாதகமான நிலையில் உள்ளது.

இரகசியத்தன்மை, பாரபட்சமின்மை, சார்பற்ற தன்மை, உலகளாவிய தன்மை மற்றும் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் எமது பணி வழிநடத்தப்படுகிறது.

எமது குழுவினர் சிறிலங்காவில், காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு முகாம்கள், மனநல அமைப்பு, சிறார்  புனர்வாழ்வு நிலையம், ஆகியவற்றுக்குச் சென்று பார்வையிட்டதுடன், அரசாங்கப் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளோம்.

அடுத்தாக, எமது உப குழு, இந்தப் பயணத்தின் கண்டறிவுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை அளிக்கும். அதில் எமது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் குறிப்பிடுவோம்.

இந்த அறிக்கையை அரச தரப்புகள் பகிரங்கப்படுத்துவதையும், ஐ.நா உபகுழு ஊக்குவிக்கும்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *