மேலும்

கோத்தாவுக்கு எந்த நீதிமன்ற அறிவித்தல்களும் கிடைக்கவில்லை – நாமல்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான எந்த அறிவித்தல்களும் அவருக்கு வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் தனது கீச்சகப் பதிவு ஒன்றில், எமக்குத் தெரிந்தவரை,  கோத்தாபய ராஜபக்சவுக்வுக்கு எந்தவொரு வடிவத்திலான அழைப்பாணையும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளர் ஒருவரும், கோத்தாபய ராஜபக்ச இதுவரை அத்தகைய அறிவிப்புகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அவரிடம் வழக்குகள் தொடர்பான அறிவித்தல்களை வழங்கப்பட்டதாக கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.

எனினும், சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட கனேடியத் தமிழர் ஒருவரும், லசந்த விக்ரமதுங்கவின் மகளும், கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள இழப்பீடு கோரும் சிவில் வழக்குகள் தொடர்பாக நேற்று முன்தினம் கோத்தாபய ராஜபக்சவிடம் வணிக வளாகம் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் வைத்து அறிவித்தல்கள் வழங்கப்பட்டன என்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *