மேலும்

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – தனித்தனியாக முடிவெடுக்கும் மகிந்த – மைத்திரி அணிகள்

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா -எதிர்ப்பதா என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர உறுதிப்படுத்தியிருந்தார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர் என்றும், அதன்போதே, வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக எதிர்ப்பதா என்று முடிவு செய்யப்படும் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

இதற்குப் பின்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சந்தித்து தமது முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்றும், அவர் கூறினார்.

அதேவேளை, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

வரும் மே நாளுக்குப் பின்னர், அதிபர் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், பரந்துபட்ட கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டிய தேவையை நேற்றைய கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார் என்றும், எதிர்க்கட்சித் தலைமை மகிந்த ராஜபக்சவும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *