மேலும்

ஜெனிவாவில் காலவரம்புக்கு உடன்படவில்லை – சரத் அமுனுகம

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலவரம்பு எதற்கும் சிறிலங்கா இணங்கவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீது நடந்த விவாதத்தில் உரையாற்றிய போதே, ஜெனிவா சென்ற அரச தரப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சரத் அமுனுகம இவ்வாறு கூறினார்.

“ஒரு கால வரம்பின் அடிப்படையில் செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாங்கள் கூறினோம்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதை சிறிலங்கா அனுமதிக்கத் தயாரில்லை என்றும் எமது குழுவினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தனர்.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க அரசியலமைப்பில் இடமில்லை என்றும், அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை என்றும் கூறினோம்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வகித்த பங்கினால், ஜெனிவாவில் சிறிலங்காவின் நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளன.

நிலைமைகளை காத்திரமான முறையில் கையாண்ட பெருமை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கே உரியது.

சில விடயங்களில் சிறிலங்கா விடாமுயற்சியுடன் செயற்பட வேண்டும்.

ஜெனிவா தீர்மானத்தை முன்வைத்த நாடுகளான, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா ஆகியவற்றில், புலம்பெயர்ந்தவர்களின் செல்வாக்கு இருக்கிறது.

அங்கு புலம்பெயர்ந்தவர்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. எனவே, அந்த நாடுகளின் தலைவர்கள் தமது தனிப்பட்ட  கருத்துக்கள் வேறுபட்டதாக இருந்தாலும், அரசியல் பிழைப்புக்காக சிறிலங்கா விவகாரத்தில் தொடர்புபடுகின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *