மேலும்

அமெரிக்காவின் கொல்லைப் புறமாக மாறும் சிறிலங்கா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமெரிக்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும், இதனால்,  அமெரிக்காவின் கொல்லைப் புறமாக சிறிலங்கா மாறும் என்றும் ஜேவிபி தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,

“இதுபோன்ற அடிபணிவு பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்காவின் அரசாங்கங்களுக்கு அதிகாரமில்லை. எனவே, அரசாங்கம் உடனடியாக இந்த முயற்சியை நிறுத்த வேண்டும்.

அதிகாரபூர்வமாக ஒரு இராணுவத் தளம் நிறுவப்படாத போதிலும், 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக் கூடிய இந்த இரண்டு உடன்பாடுகளும்,  சிறிலங்காவில் ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தை அமைப்பதற்குச் சமமானதாக இருக்கும்.

இந்த உடன்படிக்கைகளின்படி, அமெரிக்காவின் இராணுவ தளத்தை பராமரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

அத்துடன் எந்தவொரு போரின் போதும், அமெரிக்காவின் பக்கமே சிறிலங்காவை நிற்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கிறது.

இந்த உடன்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வது, இலகுவான விடயம் அல்ல.

இந்த உடன்பாடுகளால், சிறிலங்கா,  அமெரிக்காவின் ஒரு தளமாக மாறுவது தவிர்க்க முடியாதாகி விடும்.

எனவே, இந்த உடன்பாடுகளில் கையெழுத்திடவோ, அல்லது இந்த உடன்பாடுகளை நீடித்துக் கொள்ளவோ கூடாது என்று அரசாங்கத்தைக் கோருகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *