மேலும்

சிறிலங்கா படையினரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை – பீரிஸ் குற்றச்சாட்டு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா படையினரைப் பாதுகாக்க, சிறிலங்கா அரசாங்கம்  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

“இராணுவத்தைப் பாதுகாக்க சிறிலங்கா அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களை முன்னிலைப்படுத்துவதில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை.

அரசாங்கம் இப்போது முற்றிலும் மௌனமாக இருக்கிறது. போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தினரைப் பாதுகாக்க இன்னும் தீவிரமாகச் செயற்பட வேண்டும்.

நாட்டின் அமைதியைக் கொண்டு வர பெரிய தியாகங்களைச் செய்த படையினரின் நற்பெயரைப் பாதுகாக்க கடுமையாகப் பணியாற்ற வேண்டும்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம், எமது இராணுவத்தை விமர்சிப்பவர்களுடன் இணைந்து நிற்கிறது.  அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பைக் கைவிட்டு, அமைதியாக இருக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா விவகாரம் எழுகின்ற போதெல்லாம்,  அங்கு சென்று  நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் 11 கடற்படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலர் ஹெமசிறி பெர்னான்டோ கூறியிருந்தார்.

இது அனைத்துலக அமைப்புகளை சமாளிக்கின்ற அரசியல் நிகழ்ச்சி நிரலாக உள்ளது, பாதுகாப்புச் செயலர் தனது ஆணைக்கும் அப்பால் செல்கிறார்.

சாட்சியங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டியவரை தீர்மானிப்பது சட்டமா அதிபர் தான். பாதுகாப்புச் செயலர் அல்ல.

இரட்டை வேடம் போடுவதே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு நாம் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அடிப்படைக் காரணம்.

ஒரு பக்கத்தில் எமது போர் வீரர்களை தண்டிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கிறது. இன்னொரு பக்கம், சிறுவர்களுக்கு கழுத்தில் சயனைட் அணிவித்த அடேல் பாலசிங்கம் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *