மேலும்

கோத்தா வழக்கின் போது அதிரடிப்படையினர் குவிப்பு – நீதிபதிகளிடம் முறையீடு

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் அளவுக்கு அதிகமான அதிரடிப்படையினர் காணப்பட்டமைக்கு, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீபா பீரிஸ் எதிர்ப்புத் தெரிவித்தார்.

டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைத்ததில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பாக, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் கோத்தாபய ராஜபக்ச முன்னிலையாகியிருந்தார். இதன் போது அளவுக்கு அதிகமான சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீபா பீரிஸ் பெருமளவு படையினர் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சாட்சிகள் அச்சம் கொள்வார்கள் என்றும் நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள், சாதாரண உடையில் பாதுகாப்பு வழங்க முடியும் என்ற போதும், அதிகளவிலான அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருப்பது  சாட்சிகளை அச்சுறுத்தும் உளவியல் ரீதியான ஒரு தாக்குதல் நடவடிக்கை என்று அரச தரப்பு சட்டவாளர் முறையிட்டார்.

இதையடுத்து, அடுத்த விசாரணையின் போது, இந்த விடயத்தைக் கவனத்தில் கொள்வதாக நீதிபதிகள் உறுதியளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *