மேலும்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது  தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று முதல் இவர் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 1984ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்தவர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய இவர், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவாக இருந்த, 53 ஆவது டிவிசனின், வான்வழி நகர்வுப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், பணியாற்றியவர்.

இறுதிக்கட்டப் போரில், கொமாண்டோ பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாகவும், 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்ட இவர், மன்னார் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான போரில் முழுமையாகப் பங்கெடுத்தவர்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை அமைப்புகள், தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் பொறுப்பாளர்கள், தளபதிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இவருக்கும் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

போர் முடிந்த பின்னர், 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை ஐ.நாவுக்கான துணைத் தூதுவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், முக்கியமான பதவிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.

எனினும், சிறிலங்கா அதிபர் தற்போது அவரை இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவிக்கு நியமித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *