மேலும்

கிளிநொச்சி வெள்ளம் – விசாரணைக்குழு முடக்கப்பட்டமை குறித்து சந்தேகங்கள்

கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மாகாண நீர்ப்பாசன அதிகாரிகள் காரணமாக இருந்தனரா என்பது குறித்து விசாரிக்க வடக்கு மாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

வடக்கு மாகாண முன்னாள் ஆளுனர் றெஜினோல்ட் குரே இந்த விசாரணைக் குழுவை நியமித்திருந்தார்.

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட பேராசிரியர் எஸ்.எஸ்.சிவகுமார் தலைமையில், அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் உறுப்பினர்களாக,  வட மாகாண பொறியியல் சேவைகள்  பிரதி தலைமைச் செயலர்  எஸ்.சண்முகநாதன் மற்றும், மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட பேராசிரியர் சிவகுமார், “எமக்கான நியமனக் கடிதத்தில், முழுமையான விசாரணையை மேற்கொண்டு, ஒருவாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுனரால் கேட்கப்பட்டிருந்தது.

கடந்தவாரம் நாங்கள் கிளிநொச்சியில் உள்ள பொறியியல் பீட வளாகத்தில் கூடிய குழுவின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து  உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க முடிவு செய்தோம்.

எனினும், கூட்டம் முடிந்து 30 நிமிடங்களில்  ஆளுனரின் செயலாளரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

மறு அறிவித்தல் வரை விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று எனக்கு கூறப்பட்டது.

அதன் பின்னர், எனக்கு ஆளுனரின் செயலகத்தில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் அனுப்பப்படவில்லை.

எந்தக் காரணமும் குறிப்பிடாமல், விசாரணைகளை இடைநிறுத்திய ஆளுனர் செயலகத்தின் இந்த திடீர் முடிவு ஆச்சரியத்தை அளித்தது என்றும் பேராசிரியர் சிவகுமார் தெரிவித்தார்.

வெள்ளத்துக்கான காரணம் தொடர்பாக தீவிரமான பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

இரணைமடுக் குளத்தில் தேக்கக் கூடிய அதிகபட்ச நீரின் அளவை விட, 3.5 அடி அதிகமாக, 39.5 அடி உயரத்துக்கு நீரைத் தேக்க அனுமதிக்கப்பட்டது குறித்தும்,  இதனால், கட்டுமானங்களுக்கு மேலாக நீர் வழிந்தோடியது குறித்து குற்றச்சாட்டும் அதில் ஒன்றாகும்.

குளத்தின் அனைத்து வான்கதவுகளும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டதால், வெள்ளச் சேதம் ஏற்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் வெள்ள முகாமைத்துவத்தை மோசமாக கையாண்டனரா, நீர் வழிந்தோடும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு முறையான எச்சரிக்கை செய்து அவர்களை வெளியேற்றாமல் வான்கதவுகளை திறந்தனரா என்பது குறித்து விசாரணை செய்யுமாறு இந்த விசாரணைக் குழு கோரப்பட்டிருந்தது.

தவறு நடந்திருந்தால், அதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணுமாறும் குழுவிடம் கேட்கப்பட்டிருந்தது.

அதேவேளை, இந்தக் குழுவின் விசாரணை இடைநிறுத்தியதை உறுதி செய்த வட மாகாண ஆளுனரின் செயலர் இளங்கோவன், குழுவின் தலைவரான பேராசிரியர் சிவகுமார் வெளியிட்ட பகிரங்க கருத்துக்கள் காரணமாக, அது பாரபட்சமாக கருதப்படக் கூடும் என்பதாலேயே இந்த விசாரணை இடைநிறுத்தப்பட்டதாக கூறினார்.

வட மாகாணத்துக்கு சிறிலங்கா அதிபர் புதிய ஆளுனரை நியமித்த பின்னர், உண்மை கண்டறியும் புதிய குழு நியமிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *