மேலும் 69 சீனக்குடா எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில்
திருகோணமலை- சீனக் குடாவில் உள்ள 85 எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவின் உதவியுடன், கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதற்கமைய, சீனக்குடாவில் உள்ள, 85 மேல் நிலை எண்ணெய் தாங்கிகள், சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், லங்கா இந்தியன் ஓயில் நிறுவனமும் இணைந்து உருவாக்கும், கூட்டு துணை நிறுவனம் ஒன்றின் மூலம் அபிவிருத்தி செய்யப்படும்.
அபிவிருத்தி செய்யப்படும் 85 மேல் நிலைத் தாங்கிகளில் 16 தாங்கிகள், பின்னர் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வழங்கப்படும்.
எஞ்சிய 69 தாங்கிகளையும், லங்கா இந்தியன் ஓயில் நிறுவனம், அமைச்சரவையினால் தீர்மானிக்கப்படும் காலத்துக்கு, பெற்றோலிய வணிகத்துக்காகப் பயன்படுத்தும்
இந்த திட்டத்தை உள்ளடக்கிய அமைச்சரவைப் பத்தரத்தை சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
அதேவேளை, லங்கா இந்தியன் ஓயில் நிறுவனத்தினால் தற்போது பயன்படுத்தப்படும், 15 கீழ் நிலை எண்ணெய்த் தாங்கிகளின் நில உரிமை தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் வசமே இருக்கும் என்றும் இந்த உடன்பாட்டு வரைவில் கூறப்பட்டுள்ளது.