மேலும்

வடக்கு மாகாண வீதிகள் புனரமைப்பு – சீனாவை வெளியேற்றி விட்டு நுழைகிறது இந்தியா

வடக்கில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டு விட்டு அதனை இந்திய நிறுவனங்களிடம் வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புவிசார் அரசியல் கரிசனைகளை அடுத்தே, சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகி்றது.

ஆறு பொதிகளாக வடக்கு கிழக்கில், வீதிகளை அமைப்பதற்கு அனைத்துலக அளவில் கேள்விப்பத்திரம் கோரப்பட்டது. அதற்கு 44 விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன.

இதையடுத்து அமைச்சரவையினால், நியமிக்கப்பட்ட குழுவினால், இரண்டு பொதிகள், சினோஹைட்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. (இதில் ஒன்று வடக்கில், மற்றது கிழக்கில்)

ஏனைய பொதிகள், CEC-NEM கூட்டு முயற்சி, கேடிஏ வீரசிங்க நிறுவனம், பொறியாளர் மற்றும் ஒப்பந்தகாரர் ஆலோசனை நிறுவனம், நவலோகா கட்டுமான நிறுவனம் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டன.

ஆனால், இந்தியாவின் எக்சிம் வங்கியின் ஊடாக, நிதியிட்டு வடக்கு மாகாணத்தில் சில வீதிகளை அபிவிருத்தி செய்யும் பணியை  மேற்கொள்ள முடியும் என்றும் அதனை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குமாறும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் ஊடாக, இந்திய அதிகாரிகள் கோரியிருந்தனர்.

இது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் செவ்வாயன்று அமைச்சரவையில் குறிப்பாணை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார்.

“இந்தியத் தூதரகம் இரண்டு ஒப்பந்தகாரர்களை ஒழுங்கு செய்துள்ளது. ஒன்று இந்திய அரசுத்துறை நிறுவனமான இர்கோன் மற்றது,ஒரு பகுதி இந்திய அரசுத்துறை நிறுவனமான, IL&FS போக்குவரத்து வலையமைப்பு நிறுவனம்.

எனவே, வடக்கு மாகாணத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதிகளைப் புனரமைப்பதற்காக  சினோ ஹைட்ரோ நிறுவனத்துக்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒப்பந்தப் பொதியை இந்திய நிறுவனங்களில் ஒன்றுக்கு வழங்குவது விவேகமானதாக இருக்கலாம்.

சினோஹைட்ரோ நிறுவனம் ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில், வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான முதலாவது ஒப்பந்தப் பொதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக சீன ஒப்பந்தகாரர்களின் தலையீடுகள் குறித்து இந்திய அரசாங்கம் அண்மையில் தீவிரமான கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தது.

இது ஒரு புவிசார் அரசியல் கரிசனையாக இருப்பதால், அண்டை நாட்டுடன், சிறிலங்கா நல்லுறவைப் பேண வேண்டியுள்ளதைக் கருத்தில் கொண்டு, சரியான முடிவை எடுக்க வேண்டும்.

இதன்போது, கடந்த காலத்தில் இந்திய அரசாங்கத்தினால்  சிறிலங்காவின் சமூக -பொருளாதார அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட உதவி மற்றும் ஒத்துழைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.” என்றும் அந்த குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால், வடக்கில் சினோஹைட்ரோ நிறுவனம் வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியாது.

இந்திய அதிகாரிகள் கோரியபடி, இரண்டு இந்திய நிறுவனங்களும் திட்டங்களை முன்வைப்பதற்கு அழைப்பு விடுக்க அமைச்சரவையின் அனுமதி கோரப்படவுள்ளது.

இவ்வாறு திட்டம் கோரப்படவுள்ள வீதிகளில், தலைமன்னார் தொடக்கம் வவுனியா ஊடாக திருகோணமலை வரையான- 208.6 கி.மீ வீதி முதலாவதாகும்.

அடுத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை வரையான வீதியாகும். இதற்கு இரண்டு தெரிவுகள் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன், முல்லைத்தீவு, கொக்கிளாய் பாலம் வழியாக திருகோணமலை வரையான, 196 கி.மீ வீதி அல்லது, பருத்தித்துறை, மருதங்கேணி, கொக்கிளாய் பாலம் வழியாக, திருகோணமலை வரையான 220.3 கி.மீ வீதி என இரண்டு தெரிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *