மேலும்

பாதுகாப்புத் தகவல்களை நீதிமன்றங்களுக்கு வழங்கக் கூடாது – சிறிலங்கா அதிபர் உத்தரவு

நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளில், முப்படையினர் தொடர்பான உள்ளகத் தகவல்களை வழங்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சிங்கள இதழான ‘அனித்த’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் நாள்  தமது இல்லத்தில் நடந்த கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நெயார் கடத்தப்பட்டமை, உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை உள்ளிட்ட பல வழக்குகளில், விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, முப்படையினர் தொடர்பான தகவல்கள் தேவைப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு நீதிமன்றங்களும், முப்படைகளின் தளபதிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றன. ஆனால், இன்னமும் தகவல்கள் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை, பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்னவுக்கு கடிதம் அனுப்பியதை அடுத்தே, சிறிலங்கா அதிபர் தலைமையிலான கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன, கோரப்பட்ட 34 பிரிவுகளில் உள்ள தகவல்கள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்போது, காவல்துறை மா அதிபரின் பக்கம் திரும்பிய சிறிலங்கா அதிபர், ஆயுதப்படையினரை சந்தேகநபர்களாக காட்டியமை குறித்து அதிருப்தியை வெளியிட்டார். அவர்களுக்கு எதிராக  எந்த சாட்சியங்களும் இல்லை என்றும் கூறினார்.

அப்போது காவல்துறை மா அதிபர், பூஜித் ஜெயசுந்தர, நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்றும், சந்தேக நபர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

அவர்களுக்கு எதிரான போதுமான சான்றுகள் இருந்ததன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இராணுவத் தகவல்கள் எதையும் வழங்கக் கூடாது என்று முப்படைகளின் தளபதிகளுக்கும் சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *