மேலும்

சிறிலங்கா கடற்படையின் கையில் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட யுஎஸ்சிஜி ஷேர்மன் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஹவாயில் உள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் நடந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, இந்தக் கப்பலைப் பொறுப்பேற்றார்.

115 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டு, ஆழ்கடல் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்தக் கப்பலை அமெரிக்க கடலோரக் காவல்படையின் கையகப்படுத்தல் தலைமை அதிகாரியும், உதவித் தளபதியுமான றியர் அட்மிரல் ஹேகொக் அதிகாரபூர்வமாக தமது அணியில் இருந்து நீக்கினார்.

அதையடுத்து, இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின்  கப்டன் அனுர தென்னக்கோனிடம் அதனை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வில்,  அமெரிக்காவின் பசுபிக் கப்பல்படையின் கடல் நடவடிக்கை பணிப்பாளர் றியர் அட்மிரல்  மார்க் டல்டன், யுஎஸ்சிஜி ஷேர்மன் கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரி  கப்டன் வில்லியம்ஸ்,  ஹொனொலுலு  தளத்தின் கட்டளை அதிகாரி கப்டன் ரஸ்முசென், உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

சிறிலங்கா கடற்படையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள யுஎஸ்சிஜி ஷேர்மன் கப்பல், பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாக பயணத்தை ஆரம்பிக்க முன்னர், அந்தக் கப்பலில் 40 நாட்கள் சிறிலங்கா கடற்படையினர் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *