மேலும்

முல்லைத்தீவில் இன்று பாரிய போராட்டத்துக்கு அழைப்பு

மகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்ற முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நோக்கிய பேரணி ஆரம்பமாகி, தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான தென்னமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய இடங்களில் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்துள்ள மகாவலி அதிகாரசபை, அங்கு சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மகாவலி எல் வலயத் திட்டத்தின் கீழ், 2000 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு, வெளியிடங்களைச் சேர்ந்த 6000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

மகாவலி எல் வலயத் திட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியை பூர்வீகமாகக் கொண்டு ஒருவர் கூட இந்தத் திட்டத்துக்குள் உள்ளடக்கப்படவில்லை.

மகாவலி எல் வலயத் திட்டம் என்ற பெயரில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரியே இன்றைய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் இந்தப் போராட்டத்தில பெருமளவில் அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *