மேலும்

தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’

தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குரல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலிக்கத் துவங்கின.

இதன் அடிப்படையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் முதல் பாகம். இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர், பிபிசி தமிழ்

மனித குல வரலாற்றில் தேசியம் பற்றிய கருத்தியல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்டது. ஆனால் தேச அரசுகள் 18ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் உருவாகத் தொடங்கின.

சேர, சோழ, பாண்டியர்கள் தனித்தனியே அரசுரிமையுடன் ஆண்ட காலத்திலேயே “தமிழ்நாடு”, “தமிழகம்” என்ற சொற்கோவைகளும் அவற்றிற்கான கருத்தியல்களும் தோன்றிவிட்டன. “தண்டமிழ் வேலித் தமிழ்நாடு” என்று சங்ககால இலக்கியமான பரிபாடல் கூறுகிறது.

“வையக வரைப்பில் தமிழகம் கேட்ப” (புறநானூறு 168), “தமிழகப் படுத்த விமிழிசை முரசின்” (அகநானூறு 227), “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய” (சிலப்பதிகாரம் காட்சிக்காதை) என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தாயகம் பற்றிய வரையறைகள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன.

தமிழ்நாட்டிற்கான எல்லையைத் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் “வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்றார்.

நவீனத் தொழில் உற்பத்தி முறை வளர்ச்சி பெற்ற காலத்தில்தான் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிச் சிந்தனைகள் வளரத் தொடங்கின. மறுமலர்ச்சிச் சிந்தனைகள் என்பவை அவற்றின் சாரத்தின் அடிப்படையில் பார்த்தால் சனநாயகச் சிந்தனைகள்தான். மறுமலர்ச்சிச் சிந்தனையின் தொடர்ச்சியாக 18 – 19ஆம் நூற்றாண்டுகளில் உருவானதுதான் தேச அரசு (Nation State) பற்றிய கருத்தியல்!

ஆனால், அதே காலகட்டத்தில் ஐரோப்பியக் காலனியவாதிகள் ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் பீரங்கி முனையில், தேச வரையறைக்குப் பொருந்தாத புதிய புதிய காலனி நாடுகளைக் கட்டமைத்தார்கள்.

தங்களின் காலனிய வேட்டையின் நிர்வாகக் கட்டமைப்பாக பல தேசிய இனங்களைக் கொண்ட செயற்கை நாடுகளை உருவாக்கினார்கள். அப்படி வெள்ளையரால் உருவாக்கப்பட்டதுதான் இந்தியா!

இந்தியா என்ற புதிய கட்டமைப்புக்காக 1771-இல் முதல் முதலாக வெள்ளையர்கள் இந்தியா ஒழுங்குமுறைச் சட்டம் (India Regulating Act) இயற்றினார்கள். இதுதான் இன்றைய இந்தியாவின் தாய்ச்சட்டம்!

விடுதலை பெற்ற இந்தியாவில் உருவாக்கப்பட்டு 1950 சனவரி 26இல் அறிவிக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை “ஒரு தேசம்” (Nation) என்று கூறவில்லை. அரசுகளின் ஒன்றியம் என்றுதான் கூறுகிறது (Article 1 – India, that is Bharath shall be a Union of States). “இந்தியன்” என்று ஒரு தேசிய இனம் (Nationality) இந்தியாவில் இருப்பதாக அச்சட்டம் கூறவில்லை. மாறாக இந்தியாவின் குடியுரிமை (Citizenship) பற்றி மட்டுமே அது பேசுகிறது.

தனித்தனித் தேசங்களாக இறையாண்மையோடு விளங்கத்தக்க தேசிய இனங்கள் – தேசங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இவை அனைத்தும் காலனிய வேட்டைக்காக வெள்ளையரால் பீரங்கி முனையில் ஒரே நாடாக இணைக்கப்பட்டன.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் இந்த உண்மையை உணர்ந்து கொண்ட காந்தியடிகள், ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது நிர்வாக வசதிக்காக உருவாக்கிக் கொண்ட மாநிலங்களை ஏற்க வேண்டியதில்லை; மொழி, இன அடிப்படையில் காங்கிரசு மாநிலக் கமிட்டிகள் அமைய வேண்டும் என்றார். நாகபுரியில் 1920ஆம் ஆண்டு நடந்த காங்கிரசு மாநாட்டில் மொழிவழி மாநிலக் காங்கிரசுக் கமிட்டிகள் அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இன்றையத் தமிழ்நாடு – ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் பகுதி, கர்நாடகப் பகுதிகள் சில ஆகியவற்றை உள்ளடக்கி சென்னை மாநிலம் அமைத்திருந்தனர்.

ஆனால் 1947 – ஆகத்து 15ல் இந்தியாவின் ஆட்சி காங்கிரசுக் கட்சியின் கையில் வந்த பின் மொழியின மாநிலம் அமைக்க அக்கட்சி ஆட்சி மறுத்தது. தெலுங்கர், மராத்தியர், தமிழர், கன்னடர், மலையாளிகள் எனப் பல்வேறு தேசிய இன மக்கள் தங்களுக்கான மொழி இனத் தாயகமாக புதிய மாநில அமைப்புகள் கோரிப் போராடினர்.

உயிர்ப்பலிகள் நடந்தன. நிர்பந்தம் காரணமாகத்தான் காங்கிரசு ஆட்சி, மொழி வழி மாநிலங்கள் என்ற பெயரில் மொழி இன வழியில் மாநிலங்களை உருவாக்கியது. அவ்வாறு 1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அப்போது ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களிடம் தமிழர் தாயகப் பகுதிகள் பல ஒப்படைக்கப்பட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டம் – இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. இந்தியா முழுமைக்குமான “ஒரே ஆட்சி மொழி இந்தி” என்று குறிப்பிடுகிறது (343). இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடிக்கிறது. உண்மையான கூட்டாட்சியாக இருந்தால், எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக அறிவித்திருக்க வேண்டும்.

இந்தித் திணிப்பு அன்றாடம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தியில்தான் இருக்க வேண்டும் என்கிறது இந்திய அரசு! அவை தமிழில் இருக்கக் கூடாது. இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள்கூட இந்திப் பெயரில்தான் இருக்க வேண்டும் என்கிறது தில்லி!

`பறிக்கப்பட்ட உரிமைகள்’

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருந்த கொஞ்ச நஞ்ச மாநில உரிமைகளையும் இந்திய ஆட்சியாளர்கள் பறித்துவிட்டார்கள். மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை – நடுவண் அரசுக்கும் – மாநில அரசுக்கும் பொது அதிகாரமுள்ள பொதுப் பட்டியலுக்கு மாற்றிவிட்டார்கள். பொதுப் பட்டியலில் உள்ள ஒரு பொருள் குறித்து இந்திய அரசு சட்டமியற்றினால் அது மட்டுமே அதிகாரம் பெறும். அது குறித்து மாநில அரசு நிறைவேற்றும் சட்டம் செல்லாது!

தமிழ்நாட்டு அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தமிழ்நாடு அரசு செய்ய முடியாமல், “நீட்” என்ற அனைத்திந்திய நுழைவுத் தேர்வை இந்திய அரசு கொண்டு வந்துவிட்டது. இதனால், அனைத்திந்தியாவிலும் உள்ள மாணவர்கள் – மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர் புறக்கணிக்கப்படுவர்.

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவர் பணி அமர்த்தலுக்கும் அனைத்திந்தியத் தேர்வு முறை வரப்போகிறது. இதனால் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட வெளி மாநிலத்தவர் பணியில் சேர்வர். தமிழ்நாட்டு மருத்துவர்கள் தமிழ்நாட்டிலேயே ஒதுக்கப்படுவர். அதேபோல் மாவட்ட அளவிலான நீதிபதிகள் வரையில் அனைத்திந்தியா முழுவதுமிருந்தும் தேர்வெழுதி தமிழ்நாட்டுப் பணிகளுக்கு வரப் போகிறார்கள். மற்ற மாநிலங்களுக்கும் இதே போல் உரிமைப் பறிப்பு உண்டு!

ஆனால் இந்தி மாநிலங்கள் மொத்தம் பத்து இருப்பதால் அவற்றிற்கு மேற்படித் திட்டங்களால் ஆதாயம்தானே தவிர, பாதிப்பில்லை! வெளி மாநிலத்திற்கு வாய்ப்பு என்ற போர்வையில் இந்தி மாநிலங்களுக்கிடையே அப்பரிமாற்றம் நடைபெறும்.

தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசின் அலுவலகங்கள், தொழிலகங்கள் அனைத்திலும் 90 விழுக்காட்டினரும் அதற்கு மேலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே அதிலும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலையில் சேர்க்கிறார்கள். சொந்த மண்ணிலேயே தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

விற்பனை வரி போன்ற சில வரி விதிப்பு மற்றும் வசூல் அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் இருந்தன. அவற்றையெல்லாம் பறித்து விட்டது இந்திய அரசு! இந்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி மட்டுமே இப்போது வசூலிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு நிதி வருவாயில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி வசூலில் தர வேண்டிய பங்குத் தொகையையும் இந்திய அரசு சரியாகத் தருவதில்லை.

தமிழ்நாட்டில் இந்திய அரசு 1 ரூபாய் வசூலித்தால், அதில் 40 காசு அளவில்தான் திரும்பி வருகிறது! அதேவேளை, உத்திரப்பிரதசம் போன்ற இந்தி மாநிலங்களில் நடுவண் அரசு 1 ரூபாய் வசூலித்தால் 1.79 ரூபாய் அம் மாநிலங்களுக்குத் திரும்பி வருகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுவது கவனிக்கத்தக்கது.

அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றை காவிரித் தண்ணீர்ப் பங்கீட்டில் இந்திய அரசு செயல்படுத்த மறுக்கிறது. தமிழர்களுக்கெதிராக இனப்பாகுபாடு காட்டி, கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களை நடுவண் அரசு ஆதரிக்கிறது. அதனால்தான் இப்போது காவிரி உரிமை மீட்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் உச்சத்தில் இருக்கின்றன.

எங்கும் உரிமைப் போராட்டம்

மிகத் தொன்மையான, மிக வளமான காவிரிப் பாசன விளை நிலங்களில் பெட்ரோலியம், எரிவளி எடுத்ததால் நிலத்தடி நீர் நஞ்சாகி விட்டது. வயல் வெளிகள் சாகுபடிக்கு இலாயக்கில்லாமல் தரிசாகி விட்டன. மேலும் காவிரிச் சமவெளியை பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக்கிட நிலக்கரி, மீத்தேன் முதலியவற்றை எடுக்கப் பன்னாட்டு ஏலம் விட்டிருக்கிறது இந்திய அரசு.

இதனை எதிர்த்து காவிரிச் சமவெளியில் போராட்டங்கள் – தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் செம்பு உருக்காலையின் நச்சுக் கழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டங்கள் – கொங்கு மண்டலத்தில் விளை நிலங்களில் கெயில் எரிவளிக் குழாய்கள் இந்திய அரசு புதைப்பதை எதிர்த்துப் போராட்டங்கள் – தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் அணு வெடிப்பு அழிவை உண்டாக்கும் நியூட்ரினோ ஆய்வக எதிர்ப்புப் போராட்டம் என எங்கும் போராட்டம்!

வெள்ளையராட்சி உட்பட காலங்காலமாகத் தமிழ்நாட்டின் தாயாக விளங்கிய காவிரி உரிமையை – கச்சத்தீவை விடுதலை பெற்ற இந்தியா தமிழ்நாட்டிடம் இருந்து பறித்து, அடுத்த இனத்தார்க்குக் கொடுத்து விட்டது.

டலில் மீன்பிடிக்கப் போகும் தமிழர்களை சிங்களப் படை அன்றாடம் தாக்குகிறது. இந்திய அரசு தட்டிக் கேட்பதில்லை; தடுப்பதில்லை. பாலாறு, தென்பெண்ணை, பவானி ஆறுகளின் குறுக்கே அண்டை மாநிலங்கள் அணை கட்டித் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுத்து விட்டன. இந்திய அரசு இந்த அநீதியைத் தடுக்கவில்லை.

தமிழ்நாட்டின் இன்றைய மக்கள் தொகை எட்டுக்கோடி! பிரான்சு, பிரித்தானிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம்!

உலக சமூகத்தால் – ஐ.நா. மன்றத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள தேசிய இன இறையாண்மை தமிழர்களுக்குக் கிடைத்தால்தான் தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியும்; மீட்க முடியும்! எப்பொழுதும் தேசியம் என்பது தேச இறையாண்மையுடன் இணைந்தது. தமிழ்த்தேச இறையாண்மையைத் தமிழ்த்தேசியம் கோருகிறது!

– பெ. மணியரசன் (தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்)

நன்றியுடன் – பிபிசி தமிழ்  (16 ஏப்ரல் 2018)

ஒரு கருத்து “தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’”

  1. amalraj says:

    சிறந்த பதிவு நான் இந்த வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றேன்

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *