மேலும்

பயிற்சி முகாமில் மயங்கிய 19 சிறிலங்கா படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடம்

வவுனியா- பம்பைமடு சிறிலங்கா இராணுவப் பயிற்சி முகாமில் நேற்று நண்பகல் திடீர் சுகவீனமடைந்த 19 படையினர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடும் வெயிலுக்கு மத்தியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட நீரிழப்பினாலேயே அவர்கள் பாதிக்கப்பட்டதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பம்பைமடுவில் உள்ள 61-1 பிரிகேட்டின் கீழ் உள்ள பற்றாலியன் பயிற்சி பாடசாலையில் இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றது.

25 ஆவது இலகு காலாட்படையைச் சேர்ந்த 50 இற்கு மேற்பட்ட படையினருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அடுத்தடுத்து படையினர் மயங்கி விழுந்தனர்.

முதலுதவிச் சிகிச்சைகளுக்குப் பின்னர் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 19 படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஏனையோரின் உடல் நிலை தேறியுள்ளதாகவும் வவுனியா மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன.

எனினும் அனைத்துப் படையினரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பயிற்சிப் பாடசாலை 10 ஆண்டுகளாக செயற்படுவதாகவும், இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வவுனியா மருத்துவமனையில் சிறிலங்கா படையினர் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனை வளாகத்துக்குள் ஊடகவியலாளர்கள் நுழைவதற்கு நிர்வாகமும் இராணுவமும் தடை போட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *