மேலும்

நம்பிக்கையில்லா பிரேணையை மீளப்பெறுமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர்களும், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் ஆதரவு அளித்திருந்தனர்.

இவர்களை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33 பேர் சிறிலங்கா பிரதமரிடமும், அதிபரிடமும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், எஸ்.பி.திசநாயக்க, தயாசிறி ஜெயசேகர, சுசில் பிரேம ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, ஜோன் செனிவிரத்ன ஆகிய அமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராக – ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

இதையடுத்தே, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐதேக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளார்.

ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இதுபற்றிய எந்த தீர்மானங்களும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இது ஐதேகவின் முடிவு அல்ல, சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவு. ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதுபற்றிய முடிவு எடுக்கப்படும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்” என்று தகவல் திணைக்களப் பணிப்பாளர் சுதர்சன குணவர்த்தன கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *