மேலும்

நல்லிணக்கத்தை குழப்புவது வெளிநாட்டு சக்திகளே – மகிந்த குற்றச்சாட்டு

mahinda-rajapakshaசிறிலங்காவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும்,  பல்வேறு வெளிநாட்டு சக்திகளுமே காரணம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் அருண் ஜனார்த்தனனுக்கு அளித்துள்ள சிறப்பு செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தவறான புரிந்துணர்வினாலேயே, 1950களில் சிறிலங்காவில் பிரச்சினைகள் தோன்றின. அதற்கு முன்னர் பிரச்சினைகள் இருக்கவில்லை.

வெற்றிபெறுவதற்கும், மக்களின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இனவாத அரசியலை எளிதான வழியாக நோக்கிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால் தான் இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டது. காலப்போக்கில் இது போராக மாறியது. அது இந்தியாவிலும், உலகத்திலும் பரவியது.

துரதிஷ்டவசமாக போருக்குப் பின்னரும் கூட, குறிப்பிட்ட வெளிநாட்டு சக்திகள், மற்றும் வெளிநாடுகளில் செயற்படும், குழுக்கள், இந்த நாட்டை உறுதியான நிலையில இருப்பதற்கு அனுமதிக்கவில்லை.

இன்று இந்த நாட்டில் வாழும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு மிகப் பெரிய தடையாக இருப்பது, வெளிநாடுகளில் இருந்து செயற்படும் குழுக்களும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளும் தான்.” என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிவில் சமூகம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச,

“சிறிலங்காவில் தம்மை சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் என்று அழைத்துக் கொள்ளும் பெரும்பாலான அமைப்புகள், உண்மையில் சிவில் சமூக குழுக்களல்ல.

இவை மேற்குலக நாடுகளால் நிதியளிக்கப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள்.  தமக்கு நிதி வழங்குபவர்களின் நிகழ்ச்சி நிரல் யாரை ஊக்குவிக்கிறதோ அவர்களை மட்டும் இந்தக் குழுக்கள் ஆதரிக்கும்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *