மேலும்

பூகோள மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்- விக்னேஸ்வரன்

cmதமிழர்களைப் பொறுத்தவரையில் உலகளாவிய அரசியல் சிந்தனைகள் அல்லது அரசியல் ஆய்வறிவு ஆகியன மிகக் குறைவாகவே கணக்கில் எடுக்கப்படுகின்றன என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில், கடந்த மார்ச் 17ஆம் நாள்,  மூலோபாய கற்கை நிலையம்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, கற்கை நிலையத்தை, ஆரம்பித்து  வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.

  1. பண்டாரநாயக்கா சர்வதேச கற்கை நிலையம்
  2. லக்ஸ்மன் கதிர்காமர் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக் கற்கைகள் நிலையம்
  3. திரு.பாக்கியசோதி சரவணமுத்து அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்

ஆகிய நிலையங்கள் சிறப்பாக செயற்படுகின்ற போதும் தமிழ் மக்கள் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கான எந்தவொரு கற்கை நிலையமோ அல்லது அமைப்போ எம்மிடையே காணப்படாமை மிகப் பெரியதொரு பின்னடைவாக இருந்து வந்துள்ளது.

அந்த வகையில் மூலோபாயக் கற்கை நிலையமானது   எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்களும் அரசியல் ஆர்வலர்களும் அரசியல் பற்றிய ஆய்வறிவுகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்று நம்பலாம்.

சர்வதேச அரசியல் விவகாரத்தில் இலங்கையின் வகிபாகம் பற்றிக் கற்றுக் கொள்வதற்கும்  சர்வதேச அரசியலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை குறிப்பாக தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் அல்லது தீமைகள் பற்றி அறிந்து கொள்வதற்கும் இம் மையம் மிகவும் உதவியாக அமையும் எனக் கருதுகின்றேன்.

தமிழ் மக்களுக்கான அரசியல் மாற்றங்கள் மற்றும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களின் வாழ்க்கையை வழிநடத்தக் கூடிய வகையில் அரசியல் முன்னெடுப்புக்கள் இனி வருங்காலங்களில் முன்னெடுத்துச் செல்லப்பட வழிவகுக்க வேண்டும்.

நான் அரசியலுக்கு வந்தவுடன் கொழும்பில் சிங்கள அன்பர்களால் நடத்தப்படும் இவ்வாறான சில கற்கை நிலையங்களின் கருத்து முடிவுகள் வாராந்தம் எனக்குத் தரப்பட்டது. அவை தர்க்கபூர்வமாக அமைந்திருந்தாலும் அடிப்படையில் சில பிழையான ஊகங்களைக் கொண்டிருந்தன. ஆகவே அவற்றை வாசிப்பதைக் கைவிட்டேன்.

எமது சூழலுக்கும் நன்மைகளுக்கும் ஏற்றவாறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே சிறந்த வழிகாட்டல்களையும் காத்திரமான அரசியல் கொள்கைகளையும் எமது அரசியல் தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்குவதற்கு இந்த நிலையம் தன்னாலான எல்லா முயற்சிகளையும்; முன்னெடுக்க வேண்டும்

இன்றைய பூகோள அரசியல் மாற்றத்தில் இலங்கையைக் களமாகக் கொண்டு அமெரிக்கா, சீனா, யப்பான், இந்தியா, மேற்கத்தேய நாடுகள் போன்ற பல நாடுகளும் தத்தமது அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.

மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் இந்த வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் உள்நாட்டில் எமது மக்கள் மத்தியில் எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சரியான தரவுகளின் அடிப்படையில் அவற்றை வெளிப்படுத்த வேண்டியது கல்விச் சமூகத்தினர், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் முதலானோரின் கடமையாகும்.

இன்று பூகோள சுருங்கலானது பல நன்மைகளையும் தீமைகளையும் தந்து வருகின்றது. சீனாவில் மூக்குளைந்தால் அமெரிக்கா தும்முகின்றது. அவர்களின் பூகோள அரசியல் எம்மையும் பாதிக்கின்றது

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையேயான கலவரம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்ற போது உள்ளூரளவிலான ஒரு இனமுறுகல் சம்பவமாகத் தோன்றினாலும் இவ் விடயங்களின் பின்னணியில் எமது மக்களுக்குத் தெரியாத புரியாத பல அன்னிய சக்திகளின் நேரடியான அல்லது மறைமுகமான பங்களிப்புகள் இருந்துள்ளதை அவதானிக்கலாம்.

இவ் விடயங்களில் தெளிந்த ஞானமும் அறிவுமுள்ள பலர் இதனை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே எந்தவொரு விடயமும் உள்ளூர் விடயமெனத் தட்டிக்கழிக்கக் கூடியதாக இல்லை”என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம், உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளும் என்னும் தலைப்பில் உரையாற்றியிருந்தார்.

அதேபோன்று யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவர் கலாநிதி.கே.ரி.கணேசலிங்கம்,  இலங்கையை மையப்படுத்திய இந்திய அமெரிக்க சீன நகர்வுகள் என்னும் தலைப்பில் உரையாற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலையைச் சேர்ந்த கல்வி மான்கள், சிவில் சமூக செயற்பாடாளர்கள் என பலர் பங்குகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *