மேலும்

சிறிலங்காவுக்கு வாக்குறுதிகளை வழங்க மறுத்த முகநூல் அதிகாரிகள்

social media blockசிறிலங்கா அரசாங்கம் கோரியபடி, இனவெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள் முகநூல் பதிவுகளில் இடம்பெறுவதை தடுப்பது தொடர்பான எந்த வாக்குறுதிகளையும் வழங்க முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மீது சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்திருந்தது.

முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இனவெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள் இடம்பெறுவதை தடுக்குமாறு முகநூல் நிறுவனத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியிருந்தது.

இந்தியாவில் இருந்து வந்திருந்த முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்றுக்காலை அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இந்தப் பேச்சுக்களை அடுத்து, நேற்று பிற்பகல் தொடக்கம் முகநூலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இதுதொடர்பாக சிறிலங்கா அதிபர் கீச்சகத்தில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், வெறுப்புணர்வையோ வன்முறைகளையோ தூண்டுவதற்கு தளமாகப் பயன்படுத்தப்படாது என்ற வாக்குறுதியின் அடிப்படையில் இந்த தடை நீக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும், இதுதொடர்பான எந்த உத்தரவாதத்தையும் வழங்க முகநூல் நிறுவன அதிகாரிகள் முன்வரவில்லை என்று, நேற்று பேச்சுக்களில் பங்கேற்ற தரப்புகளுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமது நிறுவனம் ஏற்கனவே வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், அதுபற்றி தெளிவுபடுத்தியிருப்பதாகவும், முகநூல்நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *