மேலும்

கலவரங்களைத் தூண்டி விட்ட மகாசோஹோன் பலகாயவின் தலைவர் உள்ளிட்ட 10 பேர் கைது

Mahasohon Balakayaகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகாசோஹோன் பலகாயவின் தலைவர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களும் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக வலைத்தளங்களின் ஊடாகவே, தூண்டி விடப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து, அதில் சூத்திரதாரிகளாகச் செயற்பட்ட 10 பேரை சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

அமித் ஜீவன் வீரசிங்க என்ற பிரதான சந்தேக நபரும், ஏனைய ஒன்பது பேரும், நேற்று திகண, பூஜாபிட்டிய ஆகிய இடங்களில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மகாசோஹோன் பலகாய என்ற பெயரில் இவர்கள் செயற்பட்டுள்ளனர். இவர்களுக்கு அமித் ஜீவன் வீரசிங்கவே தலைமை தாங்கியுள்ளார்.

இந்த மகாசோஹோன் பலகாயவின் இரண்டாவது தலைவரான சுரேதா சுரவீரவும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்கியுள்ளார்.

இவர்களே, தவறான தகவல்களைப் பரப்பி இனவன்முறைகளைத் தூண்டி விட்டதுடன், முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீதான தாக்குதல்களையும் ஒருங்கிணைத்துள்ளனர்.

இவர்களில் இரண்டு பேர் மாத்திரமே கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஏனையோர் வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்றும், காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வன்முறைகளுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்று அவர்கள் நிச்சயம் கூறுவார்கள். அதனை விரைவில் மக்களுக்கு வெளிப்படுத்துவோம்.

அவசரகாலச்சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவசரகாலச்சட்டத்தின் கீழ் இவர்களை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைப்பதற்கான ஆணையை  தீவிரவாத தடுப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் வழங்கியுள்ளார்.

அத்துடன் இவர்கள் விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *