மேலும்

முடிவிற்கு வருகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம்?

TNA_PRESSஇலங்கைத் தமிழர்களின் நடப்பு அரசியல் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான மோதலாகவே உருமாறி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து, ஈழத் தமிழர் அரசியல் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வகிபாகம் ஓய்வு நிலைக்கு வந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் சக்தியாக விளங்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு சில வருட காலம் நீடித்தது.

அத்தகைய எதிர்பார்ப்பில் மாற்றம் உருவாகக் கூடும் என்பதற்கான அறிகுறிகள் அண்மையில் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள், அதிருப்திகள் ஊடாக வெளிப்பட்டு, விவாதப் பொருளாக மாறியுள்ள சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் முடிவிற்கு வருகிறதா என்ற ஐயம் இன்று உருவாகி உள்ளது.

காலத்துக்குப் பொருத்தமானது எதுவோ அது இயல்பாகவே தோற்றம் பெறும் என்பது இயங்கியல் விதி. மிதவாத அரசியல் காலாவதி ஆகியமையையும், அது தீவிரவாத அரசியலால் நிரப்பப் பட்டதையும் எம் வாழ்நாள் காலத்தில் தரிசித்தவர்கள் நாம்.

2009 ஆம் ஆண்டிற்குப் பிந்திய சூழலில் ஈழத் தமிழர் அரசியலில் ஒரு தேக்கம் ஏற்பட்டாலும் கூட, அந்த அரசியல் வெற்றிடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கச்சிதமாக நிரப்பி இருந்தது. இன்று தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கும் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வல்லமை பற்றியும் அதன் பின்னணியில் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் பற்றியும் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

2001 ஆம் ஆண்டில் தமிழ்க் கட்சிகளின் ஒருங்கிணைப்பு என்ற கருத்துருவாக்கம் கிழக்கு மண்ணில் ஏற்பட்ட காலகட்டத்தில், தமிழர் தரப்பு பல்வேறு அரசியல் கட்சிகளாகப் பிளவுண்டு கிடப்பதால் – விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ் – தமிழ் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய பிரதிநிதித்துவம் வீணாகப் பறிபோகிறது, அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற ஆதங்கமே மேலோங்கி இருந்தது. ‘அக்கினிக் குஞ்சாகத் தோன்றிய அந்தப் பொறி வெகு சீக்கிரத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தோற்றம் பெற்று, விடுதலைப் புலிகளின் அங்கீகாரத்துடன் மிகப் பாரிய அரசியல் கட்டமைப்பாகப் பரிணமித்தது. ஒரு தசாப்பதத்திற்கும் மேலாக தேர்தல் அரசியலில் தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற கட்சியாகவும் அது விளங்கியது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் எதிர் நிலை கொண்டுள்ளமை – எந்த விளைவைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டதோ அந்த விளைவையே தோற்றுவிக்கும் அபாயத்திலேயே உள்ளது.

zeid-tna (2)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்ற காலகட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அதிகாரமானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கைகளில் இருந்தது. ஆனால், இன்று?

2009 ஆம் ஆண்டிற்குப் பிந்திய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலேயே ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் இருந்து வருகின்றது. அத்தகைய அடிப்படையிலேயே சிறிலங்கா அரசாங்கமும், சர்வதேச சமூகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புகளைப் பேணி தமிழர் விவகாரத்தைக் கையாண்டு வருகின்றன.

தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் இருந்து அரசியல் அதிகாரம் பறிக்கப்படுமாயின் அது தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் நிச்சயமாக எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். அது தமிழ் மக்களுக்கு சிரமம் தரும் செய்தியே.

இவ்வாறு பறிக்கப்படும் அரசியல் அதிகாரமானது பிறிதொரு தமிழ்க் கட்சியிடம் – தெளிவான மக்கள் ஆணையூடாகக் – கைமாற்றம் செய்யப்படுமானால் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்திற்கு பங்கம் இல்லாமற் போகலாம். ஆனால், அது சாத்தியமா?

இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டி உள்ளது. மாறி மாறி பதவிக்கு வரும் சிங்கள இனவாத அரசாங்கங்கள் தமிழ் மக்களுடன் அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் தொடர்ச்சியாகப் பின்னடித்தே வருகின்றன. அவைகள் விரும்புவதெல்லாம் பேரம் பேசும் மேசையில் தமிழர் தரப்பு மிகப் பலவீனமாக இருக்க வேண்டும் என்பதையே. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சிங்களப் பேரினவாதிகள் எதிர்பார்க்கும் அந்த ‘அரிய’ வாய்ப்பை வழங்கி விடுமோ என்கின்ற அச்சம் – தேர்தல் பரப்புரைகளைப் பார்க்கையில் – எழுவதைத் தடுத்துவிட முடியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்ற காலங்களில் தேர்தலில் வெற்றிவாகை சூடியிருந்திருக்காமல் விட்டிருந்தாலும் கூட, அது தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்திற்குப் பங்கத்தை உருவாக்கி இருந்திருக்காது. ஏனெனில், அப்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரமானது – மிகத் தெளிவாக – விடுதலைப் புலிகளின் கைகளிலேயே இருந்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று வாசகர்களில் சிலர் சிந்திக்கக் கூடும்.

tna modi

உள்ளூராட்சி மன்றங்கள் வழக்கத்தில் மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டவையே. இவை அரச இயந்திரத்தின் செயற்பாட்டை வினைத்திறன் உள்ளவையாக மாற்றி மக்களுக்கான சேவைகளைப் பெற்றுத் தருகின்றவையே. அரசியல் கலப்பில்லாத மக்கள் மனதில் இடம்பிடித்த தனிநபர்களால் கூட இத்தகைய மன்றங்களை திறம்பட நிர்வகிக்க முடியும்.

ஆனால், அரசியல் கட்சி ஒன்றை பாரிய விருட்சமாக ஒப்பீடு செய்தால் அதன் வேர்களாக விளங்குபவர்கள் உள்ளூராட்சிமன்ற நிர்வாகிகளே. எனவே, ஒரு கட்சி பலமுள்ள, மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியாக விளங்க வேண்டும் என்றால் உள்ளூராட்சிமன்ற நிர்வாகங்களைத் தம்வசம் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

இன்றைய நிலையில் – ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தைத் தம்வசம் வைத்துள்ள – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனது பேரம் பேசும் திறனை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் – தமிழ்க் கட்சிகள் மத்தியில் நிலவும் பிளவு காரணமாக – இழக்கப்பட்டு விடாமல் இருப்பதை நிச்சயம் செய்து கொண்டே இதனையும் செய்ய வேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி தமிழர் அரசியல் அதிகாரத்தின் இருப்பை நிலைநாட்டும் காட்டியாகக் கொள்ளப்படக் கூடியதா என்று மற்றொரு கேள்வி எழக் கூடும். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கக் கடமைப் பட்டவர்கள் கூட்டமைப்பை எதிர்க்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களே.

ஏனெனில், உள்ளூராட்சிமன்றங்கள் மக்களின் அடிமட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மன்றங்கள் எனத் தெரிந்தும், அத்தகைய மன்றங்கள் தங்கள் கைகளில் கிடைத்தால் தாம் எவ்வாறு மக்கள் பணியாற்றுவோம் என்று கூறி வாக்குக் கேட்காமல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றியும், அந்தச் செயன்முறையில் ‘கூட்டமைப்பு அளவுக்கு அதிகமான விட்டுக் கொடுப்புக்களைச் செய்துள்ளது. அந்தக் கட்சி தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்கிறது’ என்றும் கூறிப் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்க இருக்கும் ஆணையானது – இத்தகைய பரப்புரைகளின் மூலம் – புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கான சான்றிதழாக நோக்கப்படக் கூடிய தன்மையோடு உள்ளதாகக் கருதலாம்.

எனவே, பெப்ரவரி 10 ஆம் திகதி தமிழர் தாயகத்தில் நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை ஒரு அமிலச் சோதனையாகவே இருக்கப் போகின்றது. இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு தோல்வியைத் தழுவுமாக இருந்தால் அல்லது எதிரணிகள் அதிகளவு சபைகளைக் கைப்பற்றுமாக இருந்தால்- அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் முடிவிற்கு வருகின்றது எனக் கொள்ளப்படலாம்.

மாறாக, கூட்டமைப்பு பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுமாக இருந்தால் அந்தக் கட்சியைத் தமிழ் மக்கள் ஆதரிக்கின்றார்கள். அந்தக் கட்சியின் கைகளில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தை வேறு தரப்பினருக்குக் கைமாற்றித்தர – தற்போதைய நிலையில் – தமிழ் மக்கள் தயாராக இல்லை என்ற முடிவிற்கும் வரலாம்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்துக் களத்தில் நிற்கும் ஏதாவதொரு கட்சி பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றுமாக இருந்தால் அந்தக் கட்சி தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை தனது கரங்களில் ஏந்துகின்றது என்று பொருள் கொள்ளலாம்.

இரண்டில் எது நிகழப் போகின்றது என்பது பெப்ரவரி 10 ஆம் திகதி தெரிந்து விடும். தக்கென பிழைக்கும் தகாதன அழியும் என்பது இயற்கையின் நியதி. அது நிகழ்வதை யாராலும் தடுத்துவிட முடியாது.

– சண் தவராஜா

3 கருத்துகள் “முடிவிற்கு வருகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம்?”

  1. Nakkeeran says:

    நல்ல கட்டுரை. ஆனால் முடிவுதான் சரியில்லை. வட கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ள தோற்தம், ஆதரவு வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. தமிழ்க் காங்கிரஸ் கட்சி 2010 மற்றும் 205 இல் போட்டியிட்டு கட்டுக் காசை இழந்த கட்சி. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் (5விழுக்காடு) தவிர ஏனைய 4 மாவட்டங்களிலும் ஒரு விழுக்காட்டுக்குக் குறைந்த வாக்குகளைப் பெற்ற கட்சி. தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றி சொல்லவே வேண்டாம். கேட்ட இடங்கள் அத்தனையிலும் கட்டுக்காசு இழந்த கட்சி. ஆனந்தசங்கரியின் சொந்தத் தொகுதியிலேயே கட்டுக் காசை இழந்த கட்சி. இபிஎல்ஆர்எவ் கட்சித் தலைவர் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 29,906 வாக்குகள் பெற்று 7 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டவர். அந்தக் கட்சி இன்று நாடாளுமன்றத்தில் ஒற்றைப் பனையாக இருக்கும் கட்சி. எனவே தமிழ்த் தேசியக் கட்சிக்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்கும் ஏதாவது ஒரு கட்சி பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றும் என்பது கிளி சோதிடக்காரன் சொல்லும் எதிர்கூறலைப் போன்றது. அது கட்டுரையாளரின் ஆசையேயொழிய வேறில்லை.

    1. Ganesh says:

      நல்ல ஒரு கட்டுரை சரியான கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை இலகுவில் மக்கள் நிராகரிக்க முடியாது நிரகரிகவும் மாட்டார்கள் காரணம் கூட்டணியை எதிர்ப்பவர்கள் கூட்டணியுடன் அரசியல் செய்து அவர்களது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தமிழ் மக்களுக்காக பாடுபடுவதாக சொல்வதை கேட்டு வாக்குபோட தமிழன் மடையன் அல்ல என்பது இந்த மடையன்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

  2. N.Thambipillai says:

    ஒற்றுமை இல்லாத் தமிழரின் நிலை அங்கும் இங்கும் கவலைக்குரியதாகவே இருக்கிறது.நேற்று கதிரவன் உலாவில் சுவிஸ் ஈழத்தமிழர் அவையை சிதறடித்தவர் வீராவேசத்துடன் பேட்டி கொடுத்ததை படித்தேன் கேட்டேன் . ஆற்றல் உள்ளவர் .ஆனால் கடந்த சில வருடங்களில் இளையோர்……….., பீனிக்ஸ் ………ஈழத்தமிழர் ………..இப்போ நான்காவது………..இனி அடுத்தவருடம் ………..ஐந்தாவது …..என்னவாகும் ???……Thanks to Puthinappalakai.

Leave a Reply to Ganesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *