மேலும்

சீனா- இந்திய உறவுகளை சீர்படுத்துவாரா கோகலே? – சீன ஊடகத்தின் பார்வை

india-chinaசீனாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் விஜய் கோகலேயை இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது இந்திய வெளியுறவுச் செயலராகப் பதவி வகிக்கும் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக் காலம் ஜனவரி 28ல் முடிவுறவுள்ள நிலையிலேயே இந்திய அரசாங்கம் புதிய வெளிவிவகாரச் செயலராக விஜய் கோக்கலேயை நியமிப்பது தொடர்பாக அறிவித்துள்ளது.

வெளியுறவுச் செயலர் என்பது இந்தியாவின் உயர் மட்ட இராஜதந்திரியாவார். இந்தப் பதவியானது சீனாவின் வெளிவிவகார அமைச்சிலுள்ள துணை அமைச்சரின் பதவிக்கு ஒப்பானதாகும்.

இந்திய வெளிவிவகார அமைச்சர்கள்   வழமையாக அரசியல் செல்வாக்கின் மூலமே நியமிக்கப்படுகிறார்கள். இந்திய வெளிவிவகாரச் செயலர், வெளிவிவகாரங்களில் மிக முக்கிய பங்காற்றுவதுடன் இவர் இந்தியப் பிரதமரின் மூத்த ஆலோசகராகச் செயற்படுவது மட்டுமன்றி, வெளிவிவகாரக் கோட்பாட்டை அமுல்படுத்துகின்ற பிரதான அதிகாரியாகவும் உள்ளார்.

இந்திய வெளிவிவகாரச் செயலர்களாகப் பணியாற்றிய ஆறு பேரில் நான்கு பேர் சீனாவிற்கான தூதுவர்களாகப் பணியாற்றியவர்களாவர். இவர்கள் சீன மொழியை சரளமாகப் பேசக்கூடியவர்கள்.

சீனா தொடர்பாக நன்கறிந்த வல்லுநரான கோகலே இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படுவதானது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது இந்திய மத்திய அரசாங்கத்தின் திட்டத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

கோகலே இராஜதந்திர ரீதியாக அதிகூடிய அனுபவத்தைக் கொண்டுள்ளதன் காரணமாகவே இந்தியாவின் முக்கிய பதவியான வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படவுள்ளமைக்கான அடிப்படைக் காரணமாகும். இவர் ஹொங்கொங், ஹனோய், பீஜிங், நியூயோர்க் போன்ற முக்கிய நகரங்களில் பணியாற்றியுள்ளார்.

2010 ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் 2013 வரை மலேசியாவிற்கான உயர் ஆணையாளராகவும், ஒக்ரோபர் 2013 தொடக்கம் ஜனவரி 2016 வரை ஜேர்மனிக்கான தூதுவராகவும் ஜனவரி 2016 தொடக்கம் ஒக்ரோபர் 2017 வரை சீனாவிற்கான தூதுவராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் இவர் வெளிவிவகார அமைச்சின் கிழக்காசியப் பிரிவின் தலைவராகவும் கடமையாற்றியதுடன்  ஜப்பான், மொங்கோலியா, தென்கொரியா போன்ற நாடுகளுக்கு அப்பால் சீனா மற்றும் வடகொரியாவுடன் தொடர்புபட்ட விவகாரங்களிலும் தலையீடு செய்துள்ளார்.

சீனாவிற்கான தூதுவராக கோகலே பணியாற்றிய வேளையில், சீனாவுடனான மோடி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பல்வேறு விவகாரங்களை திறமையுடன் கையாண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் ஓகஸ்ட் வரை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நீடித்த டொக்லம் இராணுவ விவகாரத்தை தணிப்பதில் கோகலே மிக முக்கிய பங்காற்றியிருந்தார்.

சீனா தொடர்பில் கோகலேயால் முன்னெடுக்கப்பட்ட கடும்போக்கு நிலைப்பாடு மற்றும் இந்திய இராஜதந்திர ரீதியான இவரது மிகச் சிறந்த நடவடிக்கைகள் போன்றன கோகலே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டைப் பெறுவதற்கு வழிவகுத்தன.

இதுவே இவர் இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படுவதற்கும் பங்காற்றியுள்ளது.

‘விஜய் கோகலே இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படவுள்ளமையானது சீனா தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் கணிசமானளவு மாற்றத்தை ஏற்படுத்தும்’ என சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோகலேயின் வெளிவிவகாரச் செயலர் நியமனமானது ‘குறிப்பிடத்தக்க மாற்றம்’ என எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதே உண்மையாகும். மோடி பதவிக்கு வந்த பின்னரும், அஜித் டோவல் இந்தியாவின் தேசிய ஆலோசகராகவும் எஸ்.ஜெய்சங்கர் இந்தியாவின் வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்ட பின்னரும் சீனா தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மாறத் தொடங்கியது.

இந்தியாவின் இராஜதந்திர முறைமையின் பெறுபேறும் கோகலே இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படவுள்ளமையில் செல்வாக்குச் செலுத்துகிறது. இந்தியாவில் இராஜதந்திர கொள்கை உருவாக்கமானது பிரதமர் அலுவலகம், செல்வாக்குமிக்க ஆலோசகரின் தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய மூன்று திணைக்களங்களால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் இராஜதந்திரக் கோட்பாடானது இறுதியாக இந்தியப் பிரதமரால் தீர்மானிக்கப்படுகிறது. கோகலேயின் இராஜதந்திர ஆற்றலானது மோடிக்கு உதவும் என்பதுவும் கோகலேயின் நியமனத்திற்கான பிறிதொரு காரணியாகும்.

இந்தியாவானது அனைத்துலக நிலைமைக்கு ஏற்ப சில சிறிய சீர்ப்படுத்தலைச் செய்வதைத் தவிர சீன விவகாரத்தில் இது தொடர்ந்தும் கடும்போக்கு அணுகுமுறையையே கடைப்பிடிக்கும் என்பதையே கோகலேயின் புதிய நியமனம் சுட்டிக்காட்டுகிறது.

மோடி இந்தியப் பிரதமர் பதவிக்கு வந்ததன் பின்னர், இந்தியாவின் அபிவிருத்தி தொடர்பான இந்தியத் தலைவர்கள் சாதகமான பெறுபேற்றை எதிர்பார்த்தனர். அதாவது இந்தியாவானது அபிவிருத்தியில் ஆசியாவின் பல்துருவமாக அல்லது உலகின் பல்துருவமாக மாற்றமுறும் என இந்தியத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக சீன-அமெரிக்க ஒத்துழைப்பு தொடர்பாக இவர்கள் அதிகம் கவலை கொள்கின்றனர். சீனா ஆசியாவின் அதிகாரம் மிக்க நாடாக மாறிவரும் நிலையில் அமெரிக்காவுடனான சீனாவின் ஒத்துழைப்பு இந்தியாவிற்கு கவலை அளித்துள்ளது.

சீனாவால் மேற்கொள்ளப்படும் பொருளாதார ஒத்துழைப்புச் செயற்பாடுகளை இந்தியாவானது பூகோள அரசியல் போட்டியாக நோக்குகிறது. குறிப்பாக சீனாவால் மேற்கொள்ளப்படும் ஒரு அணை ஒரு பாதைத் திட்டம், சீன-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதைத் திட்டம், நேபாளம், பங்களாதேஸ், சிறிலங்கா போன்ற தென்னாசிய நாடுகளுடனான சீனாவின் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்கள் போட்டியை ஏற்படுத்துவதாகவும் இது தனது நலன்களுக்கு பங்கம் விளைவிப்பதாகவும் இந்தியா கருதுகிறது. சீன-பாகிஸ்தான் உறவுகளை புதுடில்லி மிகப் பலமாக எதிர்த்து வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னர் இந்திய-பசுபிக்  தொடர்பாக இந்தியாவின் அனைத்துலக நிலைப்பாட்டை மேம்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளார். இதற்கு சீனாவே பாரியதொரு மூலோபாய போட்டியாளராக திகழும் எனவும் அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய-பசுபிக் மற்றும் யூரேசியன் பிராந்தியங்களில் இந்தியா சமவலுவைப் பேணமுடியும் என்பதுடன் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதே இந்தியாவின் உண்மையான நோக்கம் என்பதிலும் அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளதையும் இந்தியர்கள் நன்கறிவார்கள்.

இந்நிலையில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான எதிர்கால உறவுநிலையானது மேலும் விரிசலடையும் என எதிர்வுகூறப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில், தாய்வான் அதிகாரிகளுடன் இந்திய அரசாங்கம் இரகசிய உறவைப் பேணிவருகிறது. நீரிணைக்கு அப்பாலான விவகாரங்கள் மற்றும் சீனக் கோட்பாடுகள் தொடர்பாக நன்கறிந்துள்ள கோகலே, இந்திய-சீன விவகாரங்களைத் திறம்படக் கையாள்வார் எனவும் இந்தியக் கோட்பாட்டை சீனா ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்ஜால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளைச் சரிசெய்வதிலும் சிறந்த பங்காற்றுவார் என நம்பப்படுகிறது.

வழிமூலம்    – Global Times
ஆங்கிலத்தில் – Liu Zongyi
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *