மேலும்

கல்வி அமைச்சர் பதவிக்கு ஆர்னோல்ட் – தமிழ் அரசுக் கட்சி பரிந்துரை

Arnoldவடக்கு மாகாண கல்வி அமைச்சராக, மாகாணசபை உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட்டை நியமிக்குமாறு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி பரிந்துரைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

யாழ். நகரில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை, முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

தமிழ் அரசுக் கட்சியின் சார்பில்,வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சரவணபவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கல்வி அமைச்சராக இருந்த த.குருகுலராசா பதவி விலகியதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, புதிய அமைச்சரை நியமிப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

குருகுலராசா தமிழ் அரசுக் கட்சியின் சார்பிலேயே அமைச்சரவையில் இடம்பெற்றவர் என்பதால், தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே அந்தப் பதவி மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில், புதிய கல்வி அமைச்சராக யாழ். மாவட்டத்தில் இருந்து மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இமானுவேல் ஆர்னோல்ட்டை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்குப் பரிந்துரைக்கும் தீர்மானத்தை, கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் பா.அரியரட்ணம் முன்மொழிந்தார்.

இந்த தீர்மானம் , மாகாணசபை உறுப்பினர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, புதிய கல்வி அமைச்சராக, இமானுவேல் ஆர்னோல்ட்டை நியமிக்குமாறு, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, தமிழ் அரசுக் கட்சி, பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்கள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, கடந்தவாரம் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே நேற்று தமிழ் அரசுக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கருத்து “கல்வி அமைச்சர் பதவிக்கு ஆர்னோல்ட் – தமிழ் அரசுக் கட்சி பரிந்துரை”

  1. Chandra Mohan
    Chandra Mohan says:

    சுமந்திரன் சம்பந்தன் போன்று வாக்கு வாங்க ஒரு பேச்சும் பாராளுமன்றிலும் பேட்டியிலும் ஒரு பேச்சு பேசாமல் துணிந்து தலைவருக்கு கடிதம் எழுதியதில் தப்பில்லை தானே. சம்பந்தன் சங்கரி என அனைவரும் அவர்களது லிஸ்டில் இருந்தவர்கள்தானே. ? ஆனால் கேவலமாக எதையும் அவர் இதுவரை சொல்லியிருக்கவில்லை.கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அவர் கட்சிதான் புநகரியில் கூட்டமைப்பு விட்ட தவறை ஈடு செய்தது எது எப்படியோ சங்கரி தலைமையில் கூட்டணி கட்டி எழுப்பப்துபடுவது சாத்தியமில்லை. அவர் அரசியலில் ஒதுங்க முடிவெடுத்து விட்டார் . அதை நாம் பயன்படுத்தி சிறப்பான எதிரணியினை உருவாக்க இது ஒரு களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *