மேலும்

புதிய இராணுவத் தளபதி – மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேராவை நியமிக்குமாறு பிக்குகள் அழுத்தம்

major general boniface pereraசிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பான அறிவிப்பு, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்து இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதியாகப் பணியாற்றிய எயர் மார்ஷல் கோலித குணதிலக கடந்த ஜூன் 15ஆம் நாள் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அந்தப் பதவி வெற்றிடமாக உள்ளது.

இந்தப் பதவிக்கு, தற்போது சேவையில் உள்ள முப்படைகளின் தளபதிகளில் மூப்பு நிலையில் உள்ளவரான இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்படவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் இன்று வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இராணுவத் தலைமை அதிகாரியாக உள்ள மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அதிபரின் தெரிவாக இவரே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மகளின் பட்டமளிப்பு விழாவில் பற்கேற்பதற்காக சீனா சென்றிருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று நாடு திரும்பியுள்ளார்.

அதேவேளை, அடுத்த இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் பொனிபொஸ் பெரேராவை நியமிக்க வேண்டும் என்று பௌத்த மதகுருமார் பலரும் சிறிலங்கா அதிபரிடம் கோரியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்னிப் படைகளின் தலைமையக தளபதியாகப் பணியாற்றிய இவர், புதிய விகாரைகள், சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதில் முன்னின்று செயற்பட்டவர்.

முன்னதாக, இவரை இடமாற்றம் செய்த போது, பௌத்த பிக்குகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *