மேலும்

சிறிலங்கா தூதரகங்களில் மீண்டும் அரசியல் நியமனங்கள் அதிகரிப்பு- மீறப்படும் வாக்குறுதி

foreign-ministry-sri-lankaதுறைசார் இராஜதந்திரிகள் அல்லாதோரை வெளிநாடுகளில் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளாக நியமிக்கப்படுவது தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக பணியாற்றும், கருணாசேன ஹெற்றியாராச்சி, ஜேர்மனிக்கான தூதுவராகவும், புத்தி அதாவுட, பிரான்சுக்கான தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு இவர்களை எதிர்வரும் 14ஆம் நாள் பகிரங்க நேர்காணலுக்காக அழைத்துள்ளது.

இந்த நிலையில் இவர்களையும் சேர்த்தால், வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்படும், துறைசார் இராஜதந்திரிகள் அல்லாதவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரிக்கும். வெளிநாடுகளில் சிறிலங்காவுக்கு 67 தூதரகங்கள் மற்றும் தூதரகப் பணியகங்கள் உள்ளன.

இதில், 53 வீதமானவற்றில் துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத- அரசியல் செல்வாக்குப் பெற்றவர்களே தலைமைப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 5 பேர் முன்னாள் படை அதிகாரிகள் ஆவர்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வரும் போது, வெளிநாடுகளில், அரசியல் செல்வாக்கினால் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் நீக்கப்பட்டு, துறைசார் இராஜதந்திரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும், இராணுவ அதிகாரிகள் சிவில் பணிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது.

எனினும், அந்த வாக்குறுதியை மீறும் வகையில், வெளிநாட்டுத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கிலான நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், முன்னாள் படைஅதிகாரிகளும் தொடர்ந்தும் சிவில் பணிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *