மேலும்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு – சிறிலங்காவின் கனவு கலையுமா?

eu-flagசிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்குமா என்பது நாளை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள வாக்கெடுப்பிலேயே தீர்மானிக்கப்படவுள்ளது.

2010ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ரத்துச் செய்திருந்தது. இந்த சலுகையை மீள வழங்குமாறு கோரி ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா விண்ணப்பித்திருந்தது.

எனினும், இந்தச் சலுகையை மீள வழங்குவதற்கு ஒரு தொகுதி நிபந்தனைகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்தது.

அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை சி்றிலங்கா முன்னெடுத்து வந்த நிலையில், 52 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்கக் கூடாது என்று தீர்மானம் ஒன்றை கடந்தவாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மெதுவாகவே நிறைவேற்றப்படுகின்றன, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, அதற்கு மாற்றான புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல விடயங்களைச் சுட்டிக்காட்டியே இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் மீது இன்றும் நாளையும் விவாதம் நடத்தப்பட்டு நாளை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு 376 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை சிறிலங்காவுக்கு ஏற்படும்.

இந்த நிலையில், பிரசெல்ஸ் சென்றுள்ள சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, அங்குள்ள சிறிலங்கா தூதுவருடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு நேற்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அவசரமாக அதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன் பிரதி பிரசெல்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானத்தை தோற்கடிக்கும் தீவிர இராஜதந்திர முயற்சிகளை சிறிலங்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *